எனக்குன்னே வருவீங்களாடா? சிக்கலில் லியோ படக்குழு!

ஒரே நாளில் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் லியோ படத்தின் லாபம் குறையும் என குழப்பத்தில் இருக்கிறது படக்குழு

Update: 2023-08-22 02:54 GMT

தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் வெளியாகும் நாளில் போட்டிப்போட்டுக் கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் படத்துக்கான லாபம் குறையும் என தயாரிப்பு தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

படத்திலிருந்து இதுவரை ஒரே ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மொத்தமே 2 பாடல்கள்தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தனது பாணியில் முழுக்க முழுக்க இறங்கி அடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி தசரா விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் பெரிய படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பான் இந்தியா படமாக வெளியிட நினைத்திருந்த திட்டம் கொஞ்சம் கேள்விக்குறியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னன் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகவுள்ள பகவந்த் கேசரி படமும் தசரா விடுமுறையை குறிவைத்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இதே நாளில்

டைகர் நாகேஷ்வரராவ் எனும் ரவிதேஜா நடித்துள்ள படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் சிவராஜ்குமார் நடிப்பில் கோஸ்ட் படம் மிகப் பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி படங்கள் லைனில் காத்திருக்கின்றன. ஆனால் வெளியீட்டு தேதி முடிவாகவில்லை. அவர்களும் தசரா விடுமுறையை குறிவைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஹிந்தியிலும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரவாயில்லை தமிழில் மட்டுமாவது பெரிய அளவு லாபத்தை அள்ளலாம் என நினைத்தால் இங்கும் விக்ரம் படம் ரிலீஸாகி கட்டையைப் போடுகிறது.

ஆம் கௌதம் மேனன் இயக்கி தயாரித்துள்ள படம் துருவநட்சத்திரம். இந்த படத்தையும் தூசு தட்டி பட்டி டிங்கரிங் பார்த்து வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். பழைய படம் என்றாலும் விக்ரமுக்கும் கௌதமுக்கும் இது பிரேக் ஆக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் லியோ படத்துடன் மோதுகிறார்கள் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News