போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்...! கடிதம் மூலம் அறிவித்த லியோ படக்குழு..!
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கேட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என படக்குழு கடிதம் எழுதியுள்ளது.;
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து ஆன நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று சென்னை பெரியமேடு காவல் நிலையத்துக்கு கடிதம் வழங்கியுள்ளது. முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக கூறி போலிஸ் பாதுகாப்பு கேட்டிருந்ததால், ரத்து செய்யப்பட்டதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த கடிதம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
தளபதியின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான செவ்ன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
நோ ஆடியோ லாஞ்ச்
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "லியோ ஆடியோ ரிலீஸ் ரத்து செய்யப்படுகிறது. நிகழ்ச்சிக்காக அதிக எண்ணிக்கையில் பாஸ் கேட்டு வருகின்றனர். எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். அடுத்தடுத்த அப்டேட்களுடன் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வோம்" என்று கூறப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் எதிர்ப்பு
இதனை குறிப்பிட்டு செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டரால் இணையதளமே அல்லல்படுகிறது. இந்த போஸ்டர்கள் பொதுமக்களிடையே என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பது தெரியாது ஆனால் இணையதளத்தில் இந்த போஸ்டர்களை ஷேர் செய்து பலரும் விஜய்யை அரசியலில் வரவேற்பதை பற்றி பேசி வருகின்றனர்.
பாதுகாப்பு வேண்டாம்
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து ஆன நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று சென்னை பெரியமேடு காவல் நிலையத்துக்கு கடிதம் வழங்கியுள்ளது. லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக கூறி போலிஸ் பாதுகாப்பு கேட்டிருந்ததால், ரத்து செய்யப்பட்டதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ப்ரோமோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லியோ திரைப்படம் விஜய்யின் 67வது படமாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.