அரசியல் காரணங்களால் தடை செய்யப்பட்டதா லியோ இசை வெளியீடு?
விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்டதாக தகவல்
விஜய்யின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் ரசிகர்கள் இது அரசியல் காரணங்களுக்காகவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் லியோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து, ஏற்கனவே அனிருத், விஜய் பாடிய நா ரெடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடைபெறும் என பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று தயாரிப்பு தரப்பிலிருந்து வெளிவந்த தகவலில் , “ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் வேண்டி ஏராளமான கோரிக்கைகள் எழுவது மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும். பலர் நினைப்பது போல், இதற்கு அரசியல் அழுத்தமோ அல்லது வேறு காரணங்களோ கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காரணம் பாதுகாப்பு பிரச்சனை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் மதுரையில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை எடுத்துக் கூறி காவல்துறை தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவை படக்குழுவுக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்துள்ளது. மேலே குறிப்பிட்ட இந்த நிகழ்வுகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பலர் காயமடைந்தனர். இதனால், விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதேபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக படக்குழு கருதியுள்ளது.
இரண்டாவது காரணம் பாஸ் விவகாரம். லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிற தரப்பினரும் இதில் பங்கேற்க கோரிக்கை விடுத்தனர். இதனால், பாதுகாப்பு பிரச்சனை அதிகரிக்கும் என்று படக்குழு கருதியுள்ளது.
இந்த இரண்டு காரணங்களையும் கருத்தில் கொண்டு, விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இந்த விழா ரத்து செய்யப்பட்டது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சில ரசிகர்கள் இது முழுக்க முழுக்க அரசியல் காரணத்தால் நடந்தது என்று கூறுகின்றனர். அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் பிறந்த நாட்களை, நாங்கள் கொண்டாடி வருகிறோம். இலவச கல்வி பயிலகம், குருதியகம், விலையில்லா உணவகம் உள்ளிட்ட சமூக நலப் பணிகளையும் நடத்தி வருகிறோம். இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் ஆளும் கட்சி, எதிர் கட்சிகளுக்கு போட்டியாக திகழ்வார் என்பதால் இப்படி அழுத்தம் கொடுத்து ரத்து செய்ய வைத்திருக்கிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் சிலர் பேசி வருகின்றனர்.