தொடங்கியது லால் சலாம் படப்பிடிப்பு: லைகா நிறுவனம் அறிவிப்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது கணவரான தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2015- ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு ‘ஓ சாத்தி சால்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக போவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடக்க உள்ளதாகவும்,
இங்கு ரஜினி மற்றும் ஜீவிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு மற்றும் தாயரிப்பு பணிகளில் மிகவும் பிஸியாக இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஸ்போர்ட்ஸ் டிராமாவை மையமாக வைத்து, குறிப்பாக, கிரிக்கெட்டை முக்கிய கருவாக கொண்டு கதையை எழுதியுள்ளார். படத்திற்கான அறிவிப்பு வெளியாகி வெகு நாட்கள் ஆன நிலையில் தற்போது படக்குழு லால் சலாம் படம் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் 33 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜீவிதாவும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது . இந்த அறிவிப்பின் வாயிலாக ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.