ஈரம் பட இயக்குநருடன் இணையும் லைலா
ஈரம் பட இயக்குநர் அறிவழகனின் அடுத்த படமான சபதம் படத்தில் நடிகை லைலா முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளார்.;
நடிகை லைலா (பைல் படம்).
ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகும் ’சப்தம்’ படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது முக்கியமான பாத்திரத்தில் நடிக்க நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும் மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.
காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஆல்பா ப்ரேம்ஸ் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நடிகை லைலா இப்படத்தில் இணைந்தது குறித்தான அறிவிப்பு போஸ்டர் இணைய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.