கோலிவுட் டு பாலிவுட்… கத்ரினா கைஃபுடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி..!
நடிகர் விஜய் சேதுபதி நடிகை கத்ரினா கைஃபுடன் ஜோடி சேர்ந்து பாலிவுட்டில் பாதம் பதிக்கிறார்.
நடிகர் விஜய்சேதுபதி தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான நடிகர். இவர், நாயகனாக மட்டுமின்றி வில்லனாகவும் ஜொலிக்கக் கூடியவர். அதன் முக்கியமான அண்மைச் சான்றுதான் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த 'விக்ரம்'. இப்படத்தின் வெற்றி அப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அடுத்தடுத்து மிகப்பெரிய வாய்ப்புகளை வரித்துத் தந்துள்ளது என்பது உண்மை.
அவ்வகையில், தற்போது பாலிவுட்டில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் கத்ரினா கைஃபுடன் இணைந்து நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாகவுள்ளது என்கிறார்கள் படக்குழுவினர்.
விஜய்சேதுபதியைப் பொறுத்தவரையில், இமேஜ் குறித்து எப்போதும் கவலைப்படுவதில்லை. மாறாக, கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருபவர். சிறப்பான கேரக்டர் என்றால் அதற்காக எந்த சமரசத்தையும் செய்துகொள்பவர். அவரது ரசிகர்களும் இவரை வித்தியாசமான கேரக்டர்களில் பார்க்கவே விரும்புகின்றனர்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் மோஸ்ட் வான்டட் நடிகராக மாறியுள்ளார் விஜய்சேதுபதி. அடுத்ததாக அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் இவரை வில்லனாக இயக்குநர்கள் கேட்டு வருகின்றனர்.
பாலிவுட்டில் ஏற்கெனவே இவர் 'மும்பைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக்கான இந்தப் படத்தில் முனீஷ்காந்த் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதையடுத்து தற்போது, பிரபல நாயகியான கத்ரினா கைஃபுடன் இணைந்து 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'அந்தாதூன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.