கார்த்தியுடன் போட்டி போடும் கவின்..! கூடவே வறாரு ரவி..!
கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்துடன் மோத கவின் தயாராகிவிட்டார். அதே நாளில் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்துடன் மோத கவின் தயாராகிவிட்டார். அதே நாளில் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால் செப்டம்பர் 27ம் தேதி பல படங்கள் ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது.
கார்த்தி - அரவிந்த் சாமி நடித்து வரும் புதிய திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் இயக்குநரான பிரேம்குமார் இயக்குவதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
கார்த்தி 26
கார்த்தியின் 25 வது படமான ஜப்பான் மிகப்பெரிய படுதோல்வியை அடைந்தது. இந்த படத்தின் கதை சரியாக இல்லாத நிலையில், படம் வெளியிட்ட ஒரே நாளில் மண்ணைக் கவ்வியது. இந்த படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி, பிரேம்குமார் என அடுத்தடுத்து சிறந்த இயக்குநர்களுடன் இணைகிறார் கார்த்தி. இந்நிலையில், 96 பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு மெய்யழகன் என பெயரிட்டு, படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரீ திவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். முதல் தோற்றம் கடந்த மே மாதம் வெளியானது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
செப்டம்பர் 27
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்வது என தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.
இதேநாளில் ஜெயம் ரவியும், கவினும் தங்களது படங்களுடன் மோத வருகிறார்கள். ஜெயம் ரவி பிரதர் படத்துடனும் கவின் பிளடிபெக்கர் படத்துடனும் மோத வருகின்றனர்.
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் பிரதர் திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. எம் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் முதல் பாடலான மக்காமிஷி வரும் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படமும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
கவினும் வறாரு
நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் திரைப்படமும் அதேநாளை குறிவைத்து வெளிவர தயாராகி வருகிறது என்று கூறப்படுகிறது. கவின் தற்போது கிஸ், மாஸ்க் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் பிளடி பெக்கர் படம் உடனடியாக திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரே நாளில், ஜெயம் ரவி, கார்த்தி, கவின் ஆகியோரின் படங்கள் வெளிவருவதால், கடுமையான போட்டி நிலவுகிறது. கண்டென்ட்தான் கிங் என்பது போல எந்த படம் சிறப்பாக இருக்கிறதோ அதுதான் வெற்றி பெறும் அதிக வசூலையும் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.