கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் 'சீரியஸ்': விக்ரம் மருத்துவமனை
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் கவலைக்கிடமாக உள்ளதாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.;
நடிகர் புனித் ராஜ்குமார்.
கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் நெஞ்சுவலி காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ரங்கநாத் நாயக் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகர் புனித் ராஜ்குமார் காலை 11.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரது உடல்நிலை மோசமாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த 1975ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி சென்னையில் பிறந்தார். பிரபல நடிகர் ராஜ்குமார்- பர்வதம்மா தம்பதியரின் மகன் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் இயக்குநராகவும் இருந்துள்ளார்.