தாய்லாந்தில் செட் ஒர்க்! கங்குவா எப்போது ரிலீஸ்?
தாய்லாந்தில் கங்குவா கடைசி கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் கடைசிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
சூர்யாவின் அடுத்த படமான புறநானூறு பற்றிய அப்டேட் வந்துள்ள நிலையில், இப்போது நடித்து வரும் கங்குவா எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் பேசி வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் UV கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் கங்குவா படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இவர்களுடன் யோகி பாபு, கோவை சரளா, கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் உலகம் முழுக்க 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. வரலாற்றுத் திரைப்படமான இது 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.
தற்போது கங்குவா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தாய்லாந்து படப்பிடிப்பில் சூர்யாவுக்கான போர்சன்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். அதிகபட்சம் 5 முதல் 7 நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரும் நவம்பர் 5ம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைந்து சூர்யா சென்னை திரும்பிவிடுவார் என்கிறார்கள். கங்குவா படப்பிடிப்பு முழுவதுமாக நவம்பர் மாத இறுதியில் நிறைவடைகிறது.
கங்குவா படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் விரைவில் புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் தீபாவளிக்கு பிறகு தொடங்கும் என புதிய தகவல் கிடைத்துள்ளது. சூர்யா தற்போது கங்குவா படத்தில் மிகவும் பிஸியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நவம்பரில் புறநானூறு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா என தமிழ், மலையாளம், ஹிந்தி பட உலகின் முக்கியமான நடிகர்கள் நடிக்கவுள்ள இந்த படத்தில், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலிருந்தும் நடிகர்கள் ஒப்பந்தமாவார்கள் என்று கூறுகிறார்கள்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் 2டி நிறுவனம் சார்பில் ஜோதிகா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சுதா கொங்கரா, சூர்யா இணையும் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
சுதா கொங்கரா, சூர்யா இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் கதை, தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா ஹிந்தி எதிர்ப்பு போராளியாக நடிக்கிறார் எனவும் அந்த காலக்கட்டத்தில் ஒரு காதலும், ஹிந்தி எதிர்ப்பு பிரச்னையால் ஏற்படும் தாக்கமும் குறித்து பேசப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. முழுக்க முழுக்க அரசியலை வைத்து வெளுத்து வாங்க போகிறார் சுதா கொங்கரா என்று கூறப்படுகிறது.
சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தப் படம் சூர்யாவின் 43வது படம் என்பதால், இது ஒரு முக்கியமான படமாக கருதப்படுகிறது.
இந்தப் படம் ஒரு அரசியல் திரில்லராக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.முக்கியமாக ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து நிறைய காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.