நீண்ட நாட்களுக்குப் பிறகு 100 நாட்கள் சாதனையில் கமலின் ' விக்ரம்'
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' 100 நாட்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.;
நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் தமிழ்ப்பட வரலாற்றில் கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு, 100 நாட்கள் ஓடிய திரைப்படம் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறது.
அப்போதெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் ஆகியோர் நடித்த படங்கள் தியேட்டர்களில் வெளியாகி,100 நாட்கள், 125 நாட்கள், 150 நாட்கள், 175 நாட்கள் என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகும் வகையில் திரையரங்கில் ஓடி சாதனை படைத்த செய்திகளை நாம் அறிந்திருக்கிறோம்.
ஒரு காலகட்டத்துக்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை திரைகள் என்ற கணக்கில் ஓடி, படம் வெளியான ஓரிரு வாரங்களிலேயே பெரிய வசூல் சாதனை படைக்கும் புது ட்ரெண்ட் உதயமானது. அதனால், இரண்டு நாள், மூன்று நாள் என்று ஒற்றை இலக்க எண்ணில் படம் திரையில் கடப்பதை போஸ்டர் அடித்து கொண்டாடும் நிலை உருவானது.
இந்தநிலையில்தான், நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான 'விக்ரம் 2', தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 600 திரையரங்கங்களில், வெளியாகி, வெளியான மூன்று வாரங்களிலேயே, சுமார் 100 கோடி ரூபாய் வசூலை மிக எளிதாகக் கொடுத்து கொண்டாட்ட மகிழ்வுக்கு அச்சாரமிட்டது.
சுமார் 120 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 'விக்ரம்', 75 நாட்களைக் கடந்த நிலையில், உலகெங்கும் சுமார் 500 கோடி வசூல் செய்து முந்தைய திரைச் சாதனைகளை எல்லாம் முறியடித்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை நடிகர் கமல்ஹாசன் தலைமையில் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள் படக்குழுவினர்.