கமல் சொன்னதை இப்ப வர ஃபாலோ பண்ணும் மோகன்..!
கமல்ஹாசன் தனக்கு கொடுத்த அறிவுரை குறித்து மோகன் தற்போது மனம் திறந்துள்ளார். அவர் சொன்னதை இப்போது வரை பின்பற்றிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.;
கமல்ஹாசன் தனக்கு கொடுத்த அறிவுரை குறித்து மோகன் தற்போது மனம் திறந்துள்ளார். அவர் சொன்னதை இப்போது வரை பின்பற்றிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இரு துருவங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சுக் கொண்டிருந்த நிலையில், தனி ஆளாக சாதித்தவர்களுள் ஒருவர் மோகன். வெள்ளிவிழா நாயகன் என மக்களால் போற்றப்படும் மோகன் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஹரா. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஹரா படத்தைத் தவிர, தளபதி விஜய்யுடன் இணைந்து கோட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பில், விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் இணைந்து நடிக்கும் படம் தான் தி கோட். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதன் சுருக்கமே கோட்.
மைக் மோகன் என்று பெயர்பெற்ற மோகன், அநேகமாக அனைத்து படங்களிலுமே மைக்கைப் பிடித்து பாடுவது போல ஒரு பாடல் காட்சி அமைந்துள்ள திரைப்படத்தில் நடித்திருப்பார். சில பல ஆண்டுகள் மிகப் பெரிய இடத்துக்கு வந்துவிடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல் போய்விட்டார்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் ரெட்டை வால் குருவி, மணிரத்னம் இயக்கத்தில் மௌனராகம், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள், ஆர் சுந்தராஜன் இயக்கத்தில் மெல்ல திறந்தது கதவு என அவர் நடித்த படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகின. இதனால் நல்ல நடிகர் என்ற பெயருடன் வசூல் நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
கமல்ஹாசன் நடித்த கன்னட படமான கோகிலா படத்தில் அறிமுகமானார் மோகன். பின்னாளில் இருவரது படங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவது என கமலுக்கு போட்டியாகவே வளர்ந்துவிட்டார். இன்னொரு பக்கம் ரஜினியின் படங்களை விட அதிக வசூலைப் பெற்றன மோகன் படங்கள். கல்ட் கிளாசிக் என்றழைக்கப்படும் பாடல்களைக் கொண்ட மோகன் படங்கள் மிகப் பெரிய ஹிட்டானவை.
இப்படி பெரிய பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு காணாமலே போய்விட்டார். பல வருடங்கள் கழித்து அவர் தற்போது நடித்துள்ள ஹரா திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. விஜய் நடிக்கும் கோட் படமும் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் அவர் பல விசயங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் கமல்ஹாசன் தனக்கு கொடுத்த அறிவுரை பற்றியும் தெரிவித்துள்ளார். கோகிலா படத்தில் நடித்துவிட்டு பின் ஷூட்டிங் செல்லவில்லை. அவருக்கு ஷூட்டிங் எப்போது என்றே தெரியாதாம். அப்போது கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டிய காட்சிகளும் இருந்ததாம். ஆனால் மோகன் வராததால் கமல்ஹாசன் காத்திருந்தாராம். பின் தந்தி போட்டு வரவழைத்திருக்கிறார்கள். பதறியடித்துக் கொண்டு சென்றவரை, கமல்ஹாசன் அழைத்துப் பேசியிருக்கிறார்.
நன்றாக நடிக்கிறீங்க. அப்றம் ஏன் இப்படி பண்றீங்க என்று கேட்க, தனக்கு எப்போது ஷூட்டிங் என்றே தெரியாது என்று கூறியிருக்கிறார். அதற்கு கமல்ஹாசன் ஒரு டைரி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் எனவும், அதில் என்னென்னைக்கு ஷூட்டிங் என்று குறித்து வைத்துக் கொள்ளவும் கூறியுள்ளாராம். அதன்படி இப்போது வரை பின்பற்றுகிறாராம் மோகன்.