இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை
காளி போஸ்டர் சர்ச்சையான விவகாரத்தில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது கைது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.;
இயக்குனர் லீனா மணிமேகலை.
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிவரும் 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2-ம் தேதி வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் வெளியான பின்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் உள்ளதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தன் மீது பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை லீனா மணிமேகலை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்குகளால்தான் கைது செய்யக்கூடும் என்றும் தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்ய இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தனர். மேலும் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளில் லீனா மணிமேகலைக்கு எதிராக எவ்வித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். கூடுதலாக எப்ஐஆர் புதியதாக பதியப்பட்டாலும் அதிலும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.