ஜெயிலர் படத்தின் கதை இதுதான்! ஜெயிலரான ரஜினியின் ஒரு நாள் இரவு

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் கதை ஓர் நாள் இரவில் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Update: 2023-07-18 07:45 GMT

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜெயிலர். இந்த படத்தின் கதையே கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமாம். சுவாரஸ்யம் கருதி முழு கதையையும் இங்கு பதிவிட முடியாத காரணத்தால் சில விசயங்களை மட்டும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் படக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒரு நண்பர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதால், மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பீஸ்ட் படம் சரியான விமர்சனங்களைப் பெறவில்லை என்றாலும், விஜய்யை இதற்கு முன்பு காணாத ஒரு மேனரிசத்தில் காட்டியிருப்பார் நெல்சன். படம் முழுக்க விஜய்யை கொண்டாடலாம் எனும் அளவுக்கு இருக்கும். இப்போது ரஜினிகாந்தை இயக்குவதால் ரஜினிகாந்தின் வித்தியாசமான மேனரிசம் படத்தில் இருக்கும் என்கிறார்கள்.

ஜெயிலர் படத்தின் கதைப்படி, ஜெயிலரான ரஜினியைச் சுற்றியே கதை நகருமாம். வழக்கமான ஆக்ஷன் கதை போலவே அமைதியாக இருந்து அதிரடி காட்டும் நாயகனாக ரஜினிகாந்த் வருகிறாராம். மேலும் இதில் முழுக்க முழுக்க இரவு நேரத்திலான கதையே நடக்கும் என்கிறார்கள். படம் ஸ்லோவாக ஸ்டார்ட் ஆகி பின் வேகமெடுக்கும் என்றும், மற்ற மொழி நாயகர்கள் 5 நிமிட காட்சிகளுக்கே வருவார்கள் எனவும் இது முழுக்க முழுக்க ரஜினி படமாக அமையும் என்றும் கூறுகிறார்கள்.

ஜெயிலரான ரஜினிக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. அதில் ஓர் இரவு அவரின் பாதுகாப்பில் இருக்கும் மிகப் பெரிய கைதி ஒருவரை காப்பாற்ற பல்வேறு குழுக்கள் திட்டமிடுகின்றன. ஆனால் ரஜினிகாந்த் தவிர வேறு யாராலும் அவரை வெளியில் கொண்டு வரமுடியாது என்கிற நிலையில், ரஜினிகாந்தை வைத்தே குறிப்பிட்ட நபரை வெளியில் கொண்டு வர வைக்கத் திட்டமிடுகிறார்கள். இப்படி நிகழ்த்தப்படும் திட்டத்தை முறியடித்து ரஜினிகாந்த் எப்படி தான் யார் என்பதை நிரூபிக்கிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள்.

நெல்சன் இந்த படத்தில் ரஜினியுடன் நிறுத்தவில்லை. மேலும் பல நடிகர்களையும் இணைத்திருக்கிறார். மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவ்ராஜ்குமார், தெலுங்கிலிருந்து சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, பாலிவுட்டிலிருந்து ஜாக்கி செராப் என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது இந்த படம்.

படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சென்னை, ஹைதராபாத், பெங்களூர் என மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Tags:    

Similar News