கோவாவில் நாளை இந்திய சர்வதேச திரைப்பட விழா துவக்கம்

இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நாளை தொடங்குகிறது. விழாவில் 4 இடங்களில் 270-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.

Update: 2023-11-19 08:25 GMT

சர்வதேச திரைப்பட விழாக்களை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்பான சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (எஃப்.ஐ.ஏ.பி.எஃப்) அங்கீகாரம் பெற்ற உலகின் 14 மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்றாகும். கேன்ஸ், பெர்லின் மற்றும் வெனிஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்கள் இந்தப் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஏ.பி.எஃப்-வால் அங்கீகரிக்கப்பட்ட பிற புகழ்பெற்ற விழாக்களாகும்.

இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து இன்று (18-11-2023) பனாஜியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான என்.எஃப்.டி.சி-யின் மேலாண்மை இயக்குநரும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான பிருதுல் குமார் பங்கேற்றுப் பேசினார். பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் மோனிதீபா முகர்ஜி மற்றும் பிரக்யா பாலிவால் கவுர் ஆகியோரும் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு நடைபெறும் 54-வது திரைப்பட விழா குறித்து பிரிதுல் குமார் கூறுகையில், "ஐ.எஃப்.எஃப்.ஐ எனப்படும் இந்திய சர்வேதேசத் திரைப்பட விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று உலக சினிமாவில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதாகும் என்று கூறினார். தற்போது உலக சினிமாவின் மிகச்சிறந்த நபர்களில் ஒருவரான ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ், இந்த மதிப்புமிக்க விருதைப் பெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐநாக்ஸ் பாஞ்சிம், மக்வினெஸ் பேலஸ், ஐநாக்ஸ் போர்வோரிம், இசட் ஸ்கொயர் சாம்ராட் அசோக் ஆகிய 4 இடங்களில் 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன என்று அவர் கூறினார். ஐ.எஃப்.எஃப்.ஐ-ன் இந்த 54 வது விழாவில் புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு சிறந்த வெப் சீரிஸ் (ஓடிடி) விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஓடிடி தளங்களின் சிறந்த உள்ளடக்கத்தையும் அதன் படைப்பாளிகளையும் அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதில் விருதுக்காக 15 ஓடிடி தளங்களில் இருந்து 10 மொழிகளில் 32 பதிவுகள் வந்துள்ளன என்றும் தேர்வு செய்யப்படும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு நிறைவு விழாவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாக  பிருதுல் குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News