Indian 2 தமிழகத்தில் இத்தனை காட்சிகளா? அனுமதி அளித்த தமிழக அரசு..!
இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.;
இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக ரசிகர்களும் காலையிலேயே படத்தை காணமுடியும். எந்தெந்த நேரங்களில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பதைக் காண்போம்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், தனது "இந்தியன்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே பெயரில் "இந்தியன் 2" என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் இப்படம், அதன் கதை, நடிகர்கள், பாடல்கள், மற்றும் பிரம்மாண்டமான பட்ஜெட் என அனைத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருந்தாலும், அவற்றிலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இந்தியன் 2 மற்றும் 3 அமைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்தால் மட்டுமே அதனை லாபமாக எடுத்துக்கொள்ள முடியும். கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் மட்டும் செலவாகவே தயாரிப்பாளருக்கு அமைந்துள்ளதால், குறைந்தபட்சம் 600 கோடி ரூபாய் வசூலைப் பெற்றால்தான் அது மிகப்பெரிய லாபம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கும்.
கதைக்களம்:
முதல் பாகத்தில் இருந்த அதே "சேனாபதி" கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிரிகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதிக்காக போராடும் சேனாபதியின் கதை, இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு புதிய கோணத்தில் சொல்லப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் கமல்ஹாசன் பல்வேறு சாகசங்களையும் மேக்கப் போட்டு செய்துள்ளார் என்று போகும் இடமெல்லாம் சொல்லி வருகிறார் ஷங்கர்.
பிரம்மாண்டமான தயாரிப்பு:
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. இப்படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி எனக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக காலண்டர் பாடல் படத்தின் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கமல்ஹாசன் சம்பளம் மட்டுமே 150 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஷங்கருக்கு 30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர மற்ற நடிகர்களின் சம்பளம், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் என மொத்தம் 200 கோடி ரூபாய் இதுக்கே செலவாகியுள்ளது. 100 கோடி ரூபாயில் திரைப்படம் உருவாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் யார் நடித்திருக்கிறார்கள்..?
கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் குல்சன் குரோவர், எஸ் ஜே சூர்யா ஆகியோர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர, பாபி சிம்ஹா, நெடுமுடிவேணு, விவேக், சமுத்திரக்கனி, மாரிமுத்து உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாரா, கம்பேக் இந்தியன், கதறல்ஸ், நீலோற்பம் உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. படத்தின் முக்கிய பாடலாக தாத்தா வராரு கதற விட போறாரு, கம்பேக் இந்தியன் ஆகிய இரண்டும் புரமோசனில் இடம்பெறுகின்றன.
விளம்பரம் - எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வியூகம்:
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி, ஏற்கனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களில் இப்படம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கில், கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் ஆகியோர் சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை, மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நகரங்களிலும் பத்திரிகையாளர்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர்.
துபாயில் வான்வெளியில் பறக்கவிடப்பட்டது இந்தியன் 2 போஸ்டர். கேரளாவில் ஓடும் ரயிலில் இந்தியன் 2 போஸ்டர்கள் அலங்கரித்த நிலையில் மக்களை கவர்கின்றன.
அதிகாலை காட்சி
வழக்கமாக தமிழில் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு அதிகாலை காட்சிகள் இருக்கும். விஜய், அஜித், ரஜினி படங்களுக்கு அதிகாலை 2 மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்ட வரலாறும் உண்டு. ஆனால் கமல்ஹாசன் படங்களைப் பொறுத்த வரையில் அவர் நிம்மதியாக தூங்கி எழுந்து காலையில் வந்து படம் பார்த்தாலே போதும் என்ற மனநிலை கொண்டவர். அவரைப்போலவே அவரது ரசிகர்கள் தங்களுக்கு அதிகாலை காட்சிகள் வேண்டும் என்று அடம்பிடிப்பதில்லை.
ஆனால் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் சிறப்பு அனுமதி பெற்று நடைபெற வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருந்தது. அந்த வகையில் காலை 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரைக்கும் மொத்தமாக 5 காட்சிகள் திரையிடப்படலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
காலை 9 மணிக்கு முதல் ஷோ ஆரம்பித்தால், 12.30 மணிக்கு அடுத்த ஷோ தொடங்கும், மூன்றாவது ஷோ 4.00 மணிக்கும், நான்காவது ஷோ 7.30 மணிக்கும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கூடுதல் ஷோ 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரையிலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மல்டிபிளக்ஸ் காட்சிகள்
சென்னையிலுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கணக்குப்படி, காலை 9 மணிக்கு 2 திரைகளில் காட்சிகள் தொடங்குகின்றன. அடுத்த இரண்டு திரைகளில் 9.05 மணிக்கு தொடங்குகின்றன. இதேபோல அடுத்த காட்சிகள் 12.05, 12.15, 12.25 மற்றும் 12.30 ஆகிய நேரங்களில் தொடங்குகின்றன.
மூன்றாவது காட்சி 3.30 மணி முதல் 4 மணி வரை என அந்த 4 திரைகளிலும் அடுத்தடுத்து தொடங்கப்படுகின்றன. இதேபோல 7.05, 7.15, 7.20, 7.30 என காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. கடைசியாக 10.35, 10.45, 10.50, 11 என அந்த காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
திரைப்படம் 3 மணி நேரம் ஓடுவதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.