துவங்கியது படப்பிடிப்பு! இந்தியன் 2, 3 அடுத்தடுத்து ரிலீஸ்!

துவங்கியது படப்பிடிப்பு! இந்தியன் 2, 3 அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2023-11-09 09:00 GMT

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து 6 மாத இடைவெளியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியைத் தொடங்கிய பிறகு கமல்ஹாசன் சினிமாவில் பெரிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். ஒருகட்டத்தில் அவர் சினிமாவை விட்டே விலகிவிடுவார் என்கிற ரீதியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர் இந்தியன் 2 படத்தை எடுக்க ஆசைப்பட்டு அதை மட்டும் முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடலாம் என நினைத்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில்தான் தயாரிப்பாளராக ரஜினியை வைத்து ஒரு படத்தை எடுக்க விரும்பிய கமல்ஹாசன் அதற்காக அவரது ஆஸ்தான இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்டு, அதை ரஜினியிடம் சொல்லி கால்ஷீட் பெற்று படத்தை இயக்க தயாராக இருந்தார்கள். ஆனால் கொரோனா காரணமாக நின்ற படம், அடுத்து ரஜினி படத்துக்கு பதிலாக கமல்ஹாசன் படம் என மாறியது.

லோகேஷின் இயக்கத்தில் மிகப் பெரிய வசூல் சக்ரவர்த்தியான கமல்ஹாசன் மீண்டும் திரைத்துறையை ஆள அடியெடுத்து வைத்தார். இப்போது இந்தியன் 2, 3, மணிரத்னம் படம், ஹெச் வினோத் படம், கல்கி என அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் நாயகன் மீண்டும் வரார் என ரசிகர்கள் உட்பட இளைஞர்கள் பலரும் மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு பெயர் வெளியிட்டு அதனுடன் பர்ஸ்ட் லுக் டீசரும் வெளியிட்டார்கள். அதில் கமல்ஹாசன் அட்டகாசமான சண்டைக் காட்சி ஒன்றை நடத்தியிருந்தார். அன்பறிவ் மாஸ்டர்கள் இணைந்து உருவாக்கிய இந்த சண்டைக்காட்சி மிகப் பிரம்மிப்பாக அமைந்திருந்தது.


மேலும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலிருந்து ஸ்டில்கள் சில இணையத்தில் வெளியாகியிருந்தது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் காட்சிகள் அதிகம் எடுக்கப்பட்டு விட்டதாலும் அவை அனைத்துமே படத்துக்கு தேவையான காட்சிகள் என்பதாலும் அவற்றை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து 6 மாத இடைவெளியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிலும் இப்போது எடுத்துள்ள காட்சிகளை வைத்துக் கொண்டு இந்தியன் 3 படத்தை முழுவதுமாக எடிட் செய்துவிட முடியும். ஆனால் இந்தியன் 2 படத்துக்கு 30 நிமிட காட்சிகள் தேவைப்படுகிறதாம். அதற்காக கமல்ஹாசனிடம் 35 நாட்கள் கால்ஷூட் கேட்டிருக்கிறார்கள்.

இதில் பெரும்பான்மையான நாட்கள் சண்டைக் காட்சிக்காக ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சி இந்தியன் 3 படத்துக்கு போய்விட்டதால், இந்த படத்துக்கு ஒரு காட்சி வேணும் என புதிதாக திட்டமிட்டு எடுத்து வருகிறார்கள் என்று தெரிகிறது.

ஷூட்டிங் எப்போது?

கமல்ஹாசன் பங்குபெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நவம்பர் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 15ம் தேதியுடன் நிறைவடைய வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள். அதற்கிடையில் ஹெச் வினோத் படம் கொஞ்சம் தாமதமாகியுள்ளது. டிசம்பர் 15 முதல் அந்த படமும் துவங்கும் என்றும், கமல்ஹாசன் எப்போது பங்கேற்பார் என்பது பின்னர்தான் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. மணிரத்னம் - கமல்ஹாசன் - ஏ ஆர் ரஹ்மான் இணையும் பிரம்மாண்ட படம் வரும் பிப்ரவரி 2024 முதல் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம் ரிலீஸ்

இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியன் 3 படத்தை வரும் 2024 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகிறதாம் தயாரிப்பு தரப்பு. 

Tags:    

Similar News