இளையராஜாவுக்கு எம்.பி பதவி... இசைஞானிக்கு மத்திய அரசின் மரியாதை

இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி அளித்து மரியாதை செய்துள்ளது.

Update: 2022-07-07 04:13 GMT

இளையராஜா.

இளையராஜா… ஒட்டுமொத்த உலக இசைப்பிரியர்களின் உள்ளங்களில் உன்னதமான ஆசனத்தில் அசையாதவராய் அமர்ந்திருப்பவர். தமிழ்த்திரையுலகில் தனது வருகைக்குப்பிறகு எளிய மனிதர்களின் இசையை உலகமே உற்றுநோக்க வைத்தவர். புதிய இசை ராஜபாட்டையை இந்தியத் திரைவானில் படைத்து மிளிரச்செய்தவர். இன்றும் அவரது இசைக்கு மயங்காதோர் எவருமில்லை எனலாம்.

திரையுலகத்துக்கு வருவதற்கு முன்பு தனது அண்ணன் பாவலர் வரதராஜன் நடத்திவந்த கம்யூனிஸ்டு கட்சி மேடைகளில் இசைக்கலைஞனாக வளர்த்தெடுக்கப்பட்டவர் இளையராஜா.

1976 -ம் ஆண்டு 'அன்னக்கிளி' திரைப்படத்தின் மூலம் கிராமிய இசை மணத்தை முதன்முதலாக தமிழ்த் திரையுலகில் முன்னிறுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அதனையடுத்து, தமிழ்த் திரையுலகைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் பிறமொழியினரின் இதயங்களையும் கவர்ந்தவர்.

இதுவரை,தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளையும் சேர்த்து, சற்றேறக்குறைய சுமார் 7,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் இளையராஜா. தமிழகம், இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமானவர் இளையராஜா.

இந்த இசைஞானி, தனது அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை நிறைவு செய்ய இருக்கும் நிலையில்… நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நியமன உறுப்பினராக ஜூலை 6-ம் தேதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இசையை மட்டுமே மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வந்த இளையராஜாவுக்கு இசையைப் போலவே ஆன்மிகத்திலும் பெரும் ஈடுபாடு உண்டு. எத்தனையோ அரசியல் படங்களுக்கு இசை அமைத்தாலும், அரசியலில் அவ்வளவாக ஆர்வம் கொள்ளாதவர். எனவேதான், அரசியலைக் கடந்து அனைத்து நெஞ்சங்களிலும் நீங்காமல் நிறைந்திருக்கிறார்.

இந்தநிலையில், ஒரு சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா, ஒரு புத்தகத்தில் முன்னுரை எழுதி இருந்தார். அது, பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அந்தக் கருத்தை திரும்பப் பெறமாட்டேன் என்பதில் இளையராஜா உறுதியாக இருந்தார்.

இதனை மையமாக வைத்து சமூகவலைத் தளங்களில் இளையராஜாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. இளையராஜாவின் பாடல்களால் மட்டுமே இரவில் தூங்குபவர்கள் கூட இந்த விவகாரத்தில் விழித்துக் கொண்டு இளையராஜாவைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும், இளையராஜாவிடமிருந்து எந்த பதிலும் வெளிவரவில்லை. அவருக்குப் பதிலாக அவரது சகோதரரும் பா.ஜ.க.,வில் இருப்பவருமான கங்கை அமரன்தான் மீடியாக்களுக்கு விளக்கம் அளித்தார்.

இந்தநிலையில் தற்போது, இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவியை பிரதமர் மோடி வழங்கியிருப்பதை கலை மற்றும் அரசியல் களம் கவனம்கொண்டு நோக்குகிறது.

Tags:    

Similar News