இளையராஜாவை சாதியால் இகழ்ந்தவர்கள் - பாரதிராஜா நறுக்!
உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள், " என்னய்யா, பள்ளன், பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்
தமிழ் சினிமாவின் லெஜண்ட்களில் முக்கியமானவர்கள் பாரதிராஜாவும் இளையராஜாவும் நல்ல நண்பர்கள். இளையராஜா முதன்முதலில் இசையமைக்க வந்தபோது அவரைப் பார்த்து பள்ளன் பறையன்லாம் மியூசிக் போட வந்துட்டானுங்க என்று சாதியைச் சொல்லி கேலி செய்தார்கள் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து தனக்கு இருந்த ஆர்வத்தால் இசை கற்று, கருவிகளை எப்படி வாசிப்பது என்பதை அறிந்து, சினிமாவுக்குள் நுழைந்தவர். அவர் இன்று வரை 1000க்கும் மேற்பட்ட படங்களிலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைத் தந்திருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
தமிழ் மக்களாகிய நாம் காலை எழுந்தது தொடங்கி, இரவு தூங்கும் வரை பல வேளைகளிலும் இளையராஜா பாடலையும் இசையையும் கேட்காமல் இருந்துவிடவே முடியாது. அப்படிப்பட்ட வாய்ப்புகளை அடைந்த இளையராஜாவின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. அவர் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுதான் இந்த நிலையை அடைந்தார்.
மலரும் நினைவுகளை மனதில் அசைபோடத் தொடங்கிய பாரதிராஜா, தான் முதன் முதலில் ஹெல்த் இன்ஸ்பெக்ட்டராகத்தான் இளையராஜாவின் ஊருக்குப் போனதாக தெரிவித்தார். அப்போதுதான் அவரது அறிமுகம் தனக்கு கிடைத்தது என்றும், அவர்கள் எங்கு இசைக் கச்சேரி நடத்தச் சென்றாலும் தானும் அவர்களுடன் சென்றுவிடுவதாக தெரிவித்துள்ளார். தனக்கும் இளையராஜா மற்றும் அவரது சகோதர்களுக்கு சினிமா மீது ஆர்வம். தான் முதலில் சென்னைக்கு வந்து சூழலை ஓரளவுக்கு ஏதுவாக மாற்றிக்கொண்டு, இளையராஜாவையும் அவரது சகோதர்களையும் கடிதம் போட்டு பண்ணைபுரத்தில் இருந்து இங்கு கிளம்பி வரச் சொன்னதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர்தான் வாய்ப்பு தேடினார்கள். அப்போதெல்லாம் இளையராஜா நன்றாக கறி சாப்பிடுவார். அவருக்கு தலைவலி வந்தால் அதனைச் சரி செய்ய கறி சாப்பிடுவார் என்று கூறிய அவர், தான் அப்போது ரங்கநாதன் தெருவில் ரூம் எடுத்து தங்கி இருந்ததாகவும், அங்குதான் அவர்களையும் தங்க வைத்ததாகவும் கூறுகிறார். அவர்கள் தங்கி இருந்த பகுதியில் பிராமணர்கள் அதிகம் என்பதால், அவர்களை ரூமை காலி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின்னர் தேனாம்பேட்டையில் வந்து தங்கியதாக பழைய நினைவுகளைப் பற்றி பேசுகிறார்.
இளையராஜா நாடகங்களுக்கு இசை வாசித்து வந்தபோது, தான் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தாக தெரிவித்துள்ள பாரதிராஜா, இருவரும் இடைப்பட்ட காலங்களில் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தோம் என்கிறார். பின்னர் தான்தான் பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவை அறிமுகம் செய்து வைத்தேன் என்று கூறியுள்ளார்.
இளையராஜாவின் திறமையைப் பார்த்த அவர் மிரண்டுபோய், யானையைக் கவுத்திவிடுவான் (எம்.எஸ்.விஸ்வநாதனை ஓரம்கட்டிவிடுவார்) எனக் கூறினார். அன்னக்கிளி படம் மாபெரும் ஹிட் படமாக மாறியது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் எங்கு திரும்பினாலும் ஒலித்தது. அந்த காலகட்டத்தில் சினிமாவில் இருந்த சில நடிகர்கள், சினிமாவில் மிகவும் உயரிய பொறுப்பில் இருந்த உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள், " என்னய்யா, பள்ளன், பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்" எனக் கூறினார்கள். இவ்வாறு பாரதிராஜா பேசியுள்ளார்.