பொதுவெளியில் மேக்கப்போடு தோன்றமாட்டேன்: நடிகை சாய்பல்லவி

நடிகை சாய் பல்லவி, கவர்ச்சி உடை, மேக்கப் குறித்து செய்தியாளர்களிடம் மனந்திறந்து பேசினார்.

Update: 2022-06-17 06:53 GMT

நடிகை சாய் பல்லவி

மலையாளப் படமான 'பிரேமம்' படத்தின் மூலம் கேரளாவில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளைக் கடந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பேசும் ரசிகர்களையும் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. அதனைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடிக்கலானார்.

தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சியாக உடை அணிவதையும் அதேபோல், பொதுவெளியில் நிகழ்ச்சிகளிலோ பட விழாக்களிலோ பங்கேற்கும்போது பளிச்சென்ற மேக்கப்களையும் போட்டுக்கொண்டு தோன்றுவதை விரும்புவதில்லை.

அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மனந்திறந்து பேசிய சாய்பல்லவி, 'பாரம்பர்யம் மிக்கது எங்கள் குடும்பம். என் தங்கையும் நானும் பேட்மிண்ட்டன் விளையாடும்போது எங்களுக்கு விருப்பமான உடைகளையே தேர்ந்தெடுப்போம். ஆனால், அப்படியான உடைகளை சினிமாவில் போட வேண்டாம் என நான் முடிவெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு.

என்னுடைய படிப்புக்காக அப்போது நான், ஜார்ஜியா சென்றிருந்தேன். படிப்புடன் அங்கு டேங்கோ டான்ஸையும் கற்றேன். அதற்காக, ஸ்கின்னி உடையை அணியவேண்டியிருந்தது. அதை, எனது பெற்றோரின் அனுமதியோடுதான் அணிந்தேன்.

ஆனால், நான் சினிமாவிற்குள் நடிக்க வந்ததும் அந்த வீடியோ வைரல் ஆகியதோடு, மிக மோசமான கமெண்ட்டுகளையும் நான் சந்திக்க வேண்டியநிலையை ஏற்படுத்திட்டது. அதனால், இனி அம்மாதிரியான உடைகளை அணியக் கூடாது என்கிற முடிவினை எடுத்தேன்.

அதேபோல்தான், மேக்கப் விஷயமும். நான் என் தங்கையைவிட நிறத்தில் சற்று கூடுதலாக இருப்பதால், அவளுக்குள் எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். அவளுக்குள் இருக்கும் அந்த தாழ்வு மனப்பான்மையை போக்கும் பொருட்டுதான் நான், பொது வெளியில் மேக்கப் போட்டுக்கொள்வதைத் தவிர்த்துவிடுகின்றேன்" என்றார் தனது முத்திரைப் புன்னகையுடன்.

Tags:    

Similar News