விஜய்க்காகவும் கதைக்காகவுமே நான் நடித்தேன்.. சரத்குமார் ஓபன் டாக்
விஜய்க்காகவும் கதைக்காகவுமே நான் நடித்தேன் என ரசிகர்கள் கொண்டாட்ட நேர்காணலில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வாரிசு படத்தின் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் விஜய்க்காகவும் கதைக்காகவுமே நான் நடித்தேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகின. இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் வாரிசு படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு மற்றும் கே எல் பிரவீன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டார். வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் வணிக ரீதியாகவும் இந்த படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊடகச் சேனல் ஒன்றுக்கு வாரிசு படத்தின் படக்குழுவினர் 'வாரிசு ரசிகர்கள் கொண்டாட்டம்' என்ற பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். இந்த நேர்காணலில் இயக்குனர் வம்சி, நடிகர்கள் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நேர்காணலில் சரத்குமாருடன் ஷியாம் கலந்துரையாடியது இந்த நேர்க்காணலில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. வாரிசு படத்தில் சாங் இருக்கு.. பைட் இருக்கு.. எல்லாமே இருக்கு.. என்று சரத்குமார் கூறும்போது, உடனே ரஷ்மிகா இருக்காங்க என ஷியாம் சொல்ல.. உடனே ரஷ்மிகாவுக்கு போன் போட்டு கொடு.. என்று சரத்குமார் கூறுவது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மேலும் படத்தில் விஜய் உடனான சுவாரஸ்ய நிகழ்வுகளை அவர் நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், விஜய் என்னை சுடக்கு போட்டு கூப்பிடுங்க என்றார். அதற்கு நான், ஆடியன்சுகிட்ட நல்லபடியா பேர் வாங்கிட்டு இருக்கேன். ரசிகர்கள் ஏய் அப்படின்னு சத்தம்போட்டா அது நல்லா இருக்காது என தெரிவித்தார்.
அதற்கு விஜய், அப்படியெல்லாம் நடக்காது. தந்தை என்பதால் என தெரிவித்தார். அதுவும் நடந்தது என சரத்குமார் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கேன்சரால் பாதித்து தந்தை இறந்த நாட்களே ஆன மகனும் என்னுடன் படம் பார்க்க வந்ததையும், தந்தை கேரக்டரை நினைகூர்ந்து அவர் பேசினார்.
அதேபோல படத்தில் கெட்டவுட் என்று சொல்லும் காட்சி எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்ததாகவும், விஜய்க்காகவும், கதைக்காகவும் மட்டுமே நான் நடித்தேன் என தெரிவித்தார். மேலும் ரஞ்சிதமே பாட்டு குறித்தும் அவர் சுவாரஸ்யமான அனுபவங்களையும் பகிர்ந்து, பாட்டுக்கு நடனத்தையும் ஆடி மகிழ்வித்தார்.