'மகிழ்ச்சி அண்ணா..!' - உதயநிதிக்கு சிலம்பரசனின் வீடியோ..!
'வெந்து தணிந்தது காடு' படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் நிலையில் அவருக்கு சிலம்பரசன், தனது மகிழ்வைத் தெரிவித்துள்ளார்.;
நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம்தான் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் முதன் முதலில் விநியோக உரிமை வாங்கி வெளியிட்ட சிலம்பரசனின் படம். அதற்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ஒரு படத்தை மீண்டும் வாங்கி வெளியிடுகிறார் உதயநிதி. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் நடிகர் சிலம்பரசன்.
அந்த வீடியோ பதிவில்தான், ''12 வருடங்கள் கழித்து மீண்டும் உங்களுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சி அண்ணா," என்று குறிப்பிட்டுள்ளார் சிலம்பரசன்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக சிம்பு - கெளதம் மேனன் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகி சித்தி இதானி. தொடக்கத்தில் இப்படத்திற்கு, 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்று பெயரிடப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இதற்கு 'வெந்து தணிந்தது காடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது, படத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வசூல் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து 'கோப்ரா', 'சர்தார்', 'கேப்டன்', 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களை அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ்.
இந்தநிலையில், செப்டம்பர் 8ம் தேதி ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' படத்தை வெளியிட்டபின்பு அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் செப்டம்பர் 15ம் தேதி 'வெந்து தணிந்தது காடு' படத்தையும் வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ். அந்த நாளை, சிலம்பரசனின் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.