அனைவரையும் மீண்டும் கன்னடத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த 'காந்தாரா'..!

Kannada New Movies -'கே.ஜி.எஃப்.' படங்களுக்குப்பிறகு, இந்தியத் திரைவானில் கன்னடத் திரையுலகின் மீதான பார்வையைத் திருப்பியிருக்கிறது காந்தாரா..!

Update: 2022-10-17 09:36 GMT

Kannada New Movies - கன்னடத் திரைப்படமான 'காந்தாரா' குறித்தான பேச்சுதான் கர்நாடகாவைத் தாண்டி, கடந்த இரண்டு வாரங்களாக எல்லோராலும் பேசப்படும் படமாக இருந்து வருகிறது. 'கே.ஜி.எஃப்' 1 மற்றும் 2 படங்களின் அசாத்திய வெற்றிக்குப் பிறகு கன்னடத் திரைப்படங்களின் மீதான பார்வை இந்திய அளவில் திரும்பியிருக்கிறது. மேலும், கன்னடத் திரையுலகிலும் திறமையான இயக்குநர்கள், நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதை இப்படங்கள் படைப்பு ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நிரூபித்துள்ளன.

'கே.ஜி.எஃப்' திரைப் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார். இந்தப் படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பாளரான விஜய் கிரகந்தூர்தான் தற்போது, 'காந்தாரா' திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறார்.

நடிகர்கள் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கும் 'காந்தாரா' படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டிதான் படத்தை இயக்கியும் இருக்கிறார். அண்மையில்தான் இப்படம் கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கூடிய விரைவில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழில் இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுதான் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்திலும் 'காந்தாரா' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தநிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குநரும், நாயகனுமான நடிகர் ரிஷப் செட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ''காந்தாரா என்பது அடர்ந்த வனத்தின் உள் இருக்கும் மர்மமான பகுதி. 18 ஆம் நூற்றாண்டில் இருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்றுதான் இந்தப் படத்தை எடுத்தோம். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதற்குப்பிறகுதான் திரையுலகில் அறிமுகமானேன். மேலும், இந்தப் படத்தை நான் என்னுடைய சொந்த ஊரில்தான் எடுத்தேன்.

சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ அதனை எல்லாம் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறேன். அப்பொழுது இருந்த சமூகம், மக்களின் நம்பிக்கை, கலாசாரம் போன்ற பல விஷயங்களை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள், குலதெய்வங்கள் இருக்கும். அதுபோன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்தான் நான். காவல் தெய்வங்கள்தான் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் மனிதர்களை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன்.

'காந்தாரா' படத்தில் இடம் பெற்றிருப்பது போல நான் சிறிய வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையுமே சமமாகவே கருதுவார்கள். தற்போது இந்த விஷயங்கள் எந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டு இருக்கின்றது என்பதைப் பற்றியும் இந்தப் படத்தில் தெளிவாகக் காண்பித்து இருக்கிறோம். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையைப் பயன்படுத்தில்த்தான் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது'' என்று படம் குறித்த பல சுவாரஸ்யமான செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News