'காந்தாரா' - ரஜினிகாந்த் - ரிஷப் ஷெட்டி சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை, 'காந்தாரா' படத்தின் நாயகனும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அண்மையில் இந்தியத் திரையுலகின் கவனம் ஈர்த்த படம் 'காந்தாரா'. இப்படத்தில் நாயகனாக நடித்து படத்தை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி. 'காந்தாரா' திரைப்படம் முதலில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியானது. திரைப்படம் வெளியாகி முதல் வாரத்தைக் கடந்த நிலையில், பல்வேறு தரப்பில் வரவேற்கத் தக்க விமர்சனங்களையும் ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பையும் பெற்று வசூலிலும் சாதனை படைக்கத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்து கடந்த அக்டோபர் 15-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியிட்டது. அதன் பிறகு, இப்படம் பல்வேறு மொழியைச் சேர்ந்த ரசிகர்களின் பேராதரவைப் பெற்று மிகுந்த வரவேற்புக்குள்ளானது. அதோடு, திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வணிக ரீதியான வெற்றியை எட்டியது. அதோடு, கன்னடத்தைத் தாண்டி இந்திய மொழிகளின் அனைத்து திரைக்கலைஞர்களையும் 'காந்தாரா' வியப்படைய வைத்ததோடு, அவர்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.
'காந்தாரா' திரைப்படம், 16 கோடி ரூபாய் செலவில் தயாரானது. இதுவரை வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்து, உலகம் முழுவதிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 200 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 'காந்தாரா' திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தப் படத்தில் தெரிந்ததைவிட, தெரியாததை இதைவிட சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. இப்படம் இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பு. 'காந்தாரா' திரைப்படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ள ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள். படக்குழுவினருக்கும் பாராட்டுகள்' என்று பதிவிட்டிருந்தார்.
ட்விட்டரில், 'காந்தாரா' படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த பாராட்டுக்கு, நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைத்தளப் பக்கமான ட்விட்டரில், 'இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீங்கள். உங்களிடமிருந்து வாழ்த்து கிடைத்திருப்பதைப் பாக்கியமாகக் கருதுகிறேன். எட்டு வயதில் இருந்து நான் உங்கள் ரசிகன்.' என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், 'காந்தாரா' திரைப்படத்தின் நாயகனும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, நேற்று(28ம் தேதி) சென்னைக்கு வந்து போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து, வாழ்த்துப் பெற்றார். அப்போது, 'காந்தாரா' திரைப்படத்தைப் பாராட்டியதற்கும், தான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியதற்கும் தனது மகிழ்வான நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் ரிஷப் ஷெட்டி.
இந்த சந்திப்பின்போது, நடிகர் ரஜினிகாந்த் 'காந்தாரா' திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்களை ரிஷப் ஷெட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாராம். மேலும் இந்த சந்திப்பு குறித்து, தான் சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்த நாயகனான ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்ததும் அவர் திரைப்படம் குறித்து அவரோடு கலந்துரையாடியதும் தனக்குக் கிடைத்த பொன்னான தருணங்கள் என்று நெகிழ்ச்சியோடு தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாராம் ரிஷப் ஷெட்டி. தனது திரையுலகக் கலைப் பயணத்தில் இத்தருணம் மறக்க முடியாத ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.