எங்களுக்காக எம்ஜிஆர் விட்டுச்சென்ற படம் இது… இயக்குநர் மணிரத்னம் பெருமிதம்..!
இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீட்டு விழாவில் எம்ஜிஆர் குறித்து நினைவு கூர்ந்தார்.;
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைக்காவியத்தின் புரமோஷன், மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை(08/07/2022) நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம், "நான் கல்லூரி செல்ல ஆரம்பித்தபோது பொன்னியின் செல்வனைப் படித்தேன். அன்றிலிருந்து அது என் மனதைவிட்டுப் போகவில்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தப்படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்கவேண்டிய படம். 'நாடோடி மன்னன்' படத்திற்கு பிறகு அவர், பொன்னியின் செல்வன் படம் நடிப்பதாக இருந்தது. ஏதோ ஒரு காரணத்தால் அந்தப்படம் நின்று விட்டது.
இன்றுதான் எனக்கு அந்தப் படம் ஏன் நின்றது எனப் புரிந்தது. எங்களுக்காக எம்ஜிஆர் இந்தப் படத்தை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தப்படத்தை எடுக்க பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள். நானே பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதற்கு மூன்று முறை முயற்சி செய்திருக்கிறேன். அதனால் இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது எனக்குத் தெரியும். எல்லோராலும் பொன்னியின் செல்வன் நேசிக்கப்படுகிறது என்பதும் தெரியும். நாவலைப் படித்தவர்கள் எல்லாம் அதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
நான், இந்தப் படத்தில் பங்கேற்ற கலைஞர்களின் உதவி இல்லாமலும், ரவிவர்மன், ரஹ்மான், தோட்டாதரணி, ஸ்ரீகர் பிரசாத், ஜெயமோகன், இளங்கோ கிருஷ்ணன் போன்ற ஒவ்வொருவரின் உதவி இல்லாமலும் இதனைச் செய்திருக்க முடியாது. முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் இடையில் படப்பிடிப்பில் பிபிஇ கிட் அணிந்து தான் வேலை நடந்தது. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, என்னைப் பொறுத்துக் கொண்டு கூட பயணம் செய்ததற்கு நன்றி" என்றார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, "30 ஆண்டுகளாக எனக்கு பாஸ் மணிரத்னம்தான். வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும் என என்னை வளர்த்தவர் இவர். இது இந்தியாவின் படம். லாக்டவுன் சமயத்தில் இந்தப் படத்தை இவ்வளவு பிரமாண்டமாய் எடுத்துள்ளனர். அதற்கே பெரிய நன்றி'' என்றார்.