திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கிய டைரக்டர் ஸ்ரீதர் பர்த்டே டுடே
ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள்.கல்யாணப்பரிசு தொடங்கி நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.;
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர். அதன்பிறகு அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
1957ஆம் ஆண்டு வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடித்திருந்த நிலையில், வீனஸ் பிக்சர்ஸ் என்னும் இந்த படத்தை தயாரித்தது. மேலும் நடிகை சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் இது. அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி (கல்யாணப்பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), நிர்மலா, மூர்த்தி (வெண்ணிற ஆடை - இப்படமே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாகவும் இருந்து வருகிறது) ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள்.
பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் , வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம் போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி இளையராஜாவுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.