இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக வந்திருக்கும் வாய்ப்பு..!
கோவை மாவட்டக்கல்லூரி இளைஞர்களுக்கு ஒரு குறும்படப் போட்டியின் மூலம் லோகேஷ்கனகராஜிடம் பணிபுரியும் வாய்ப்பு உருவாகியுள்ளது;
ஒரு சில படங்களையே இயக்கி இருந்தாலும், முன்னணி இயக்குநர்களின் வரிசையில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தவரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் வித்தியாசம் கொடுப்பதில் கவனமாக இருந்து தொடர் வெற்றியை தோளில் சுமந்து பெருமிதத்தோடு தமிழ்த் திரையுலகில் நிமிர்ந்து நிற்கிறார். அதோடு, நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் 'விக்ரம்-2' படத்தை இயக்கி 500 கோடி ரூபாய் வசூல் என்று பெருவெற்றிப் படம் வழங்கி, உலகமே தன்மீது கண்பதிக்க வைத்தார்.
இந்தநிலையில், பல முன்னணி நாயகர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினாலும், லோகேஷ் தனது கதைக்கேற்ற நடிகர்களை நடிக்க வைக்கும் முடிவை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறார். இந்தநிலையில், கோவை மாவட்ட இளைஞர்களுக்கு லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக ஓர் அரிய வாய்ப்பை ஒரு குறும்படப் போட்டியை அடிப்படையாக வைத்து கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை மாநகர காவல் துறை மற்றும் டெக்ஸிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பினரும் இணைந்து குறும்பட போட்டி ஒன்றை அறிவித்துள்ள்னர். போதை தடுப்பு விழிப்புணர்வு என்ற கருத்தை முன்வைத்து மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை உள்ள குறும்படங்களை அக்டோபர் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராகப் பணியாற்றலாம் என்பதைப் பிரதானமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்தப் போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பிற மாவட்ட இளைஞர்கள் ஏமாற்றத்தில் சோகமடைந்துள்ளனர்.