இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு
Marimuthu Passed Away: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்
Marimuthu Passed Away: பிரபல இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார். பிரபல தொலைக்காட்சியான சன்டிவியில் 'எதிர்நீச்சல்’ தொடர் மூலம் பிரபலமானவர். இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.
எதிர் நீச்சல் சீரியலில் இவரின் ஆதிமுத்து குணசேகரனின் தனித்துவமான டயலாக் டெலிவரி மற்றும் வித்தியாசமான உடல் மொழி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக, “ஏய், இந்தம்மா” என்று பெண்களிடம் அவர் பேசும் டயலாக் ஒன்று இணையத்தில் புயலை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014ம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறாததால், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு கோலிவுட் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளன. புது வீட்டில் குடியேறுவதற்கு ஆவலாக இருந்த அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.