ஜெய்பீம் பட காப்புரிமை குறித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஜெய்பீம் திரைப்பட காப்புரிமை தொடர்பாக 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
ஜெய்பீம் பட போஸ்டர்.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், சூர்யா, மணிகண்டன், பிரகாஷ்ராஜ் நடித்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இதற்கிடையே, ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திட்டமிட்டே இயக்குநர் ஞானவேல் இழிவுப்படுத்தியதாக அவர் மீதும் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குளஞ்சியப்பன் என்பவர் இதேபோன்று வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஜெய்பீம் திரைப்படத்தின் கதை தன்னுடைய வாழ்க்கையின் உண்மை சம்பவம் என்றும், அதை திரைப்படமாக எடுக்க எண்ணி இருந்ததாகவும், தாம் எழுதி வைத்திருந்த கதை திருடப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
புகார் தொடர்பாக காவல்துறை முழுமையாக விசாரணை நடத்தி காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவுப்படி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தினர் இயக்குநர் ஞானவேல் மற்றும் படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை பெருநகர 9 ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், வழக்கு பதிவு செய்து எட்டு மாதங்கள் கடந்தும், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, செப்டம்பர் 15 ஆம் தேதி வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.