திருப்பதியில் நடிகர் தனுஷுக்கு நடந்த அவமானம்..!
திருப்பதியில் நடிகர் தனுஷுக்கு நடந்த அவமானம்..!;
திருப்பதியில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதை தொடர்ந்து, திருப்பதி மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர ரெட்டி படப்பிடிப்புக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான "கேப்டன் மில்லர்" திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக, அவர் இயக்கி நடிக்கும் 50 ஆவது படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அவருடைய 51 ஆவது படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார். நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
தற்காலிகமாக "DNS" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று காலை நடந்தது. அதிகாலை 3 மணி முதல் நடந்த படப்பிடிப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதால், போலீஸார் போக்குவரத்தை மாற்றினர்.
அதாவது, திருப்பதி மலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்துகள், பக்தர்களின் வாகனங்கள், மேல் திருப்பதியில் உள்ள அர்ச்சகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரின் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பிவிட்டனர். இந்த பணியில் தனுஷுக்கு பாதுகாப்பு அளிக்க வந்திருந்த பவுன்சர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அந்த குறுகலான ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் திருப்பதியில், சினிமா படப்பிடிப்பு ஒன்றுக்காக பக்தர்களின் வாகன போக்குவரத்தை மாற்றி பக்தர்களையும் பொதுமக்களையும் அல்லல்படுத்திய போலீஸாரை பலர் கண்டித்தனர்.
பலர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். பொதுமக்கள் படக்குழுவினருடனும் மோதல் போக்கில் ஈடுபட்டனர். மேலும் தேசிய விருது பெற்ற சேகர் கமூலா சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அங்கு ஊடகங்கள் குவிந்த நிலையில், மீண்டும் அலிபிரி பாதை வழியாக வாகன போக்குவரத்தை திருப்பி விட்டு போக்குவரத்தை சீர் செய்ய முயற்சி செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
பல லட்சம் செலவு செய்து அலிபிரி மலை பாதையில் ஷூட்டிங் நடத்த அனுமதி பெற்றதாக கூறப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு அளித்த சம்பவத்திற்கு பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து தனுஷ் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதியை மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர ரெட்டி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களின் வசதிகளை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தனுஷ் தரப்பில் எந்த பதிலும் வெளியிடப்படவில்லை.
தனுஷ் தற்போது இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ளார். அவரது 50 வது படமான D50 ஐ அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.