இந்தியில் தடம் பதித்த டிடி..!
விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளாரான டிடி, ரன்பீர் கபூர் படத்தின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இந்தியில் தடம்பதித்தார்.;
முக்கிய தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி என்று பிரபலமாக அழைக்கப்பெறும் திவ்யதர்ஷினி. சற்றேறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் இயங்கி வருபவர். அத்துடன் எண்ணற்ற ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர்.
காஃபி வித் டிடி இவரது குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சிக்கெனவே தனி ரசிகர் கூட்டம் உருவானது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தநிலையில், கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர், வாணி கபூர் இணைந்து நடித்துள்ள 'ஷம்ஷேரா' படத்தின் அறிமுக விழா 10/07/2022 அன்று மும்பையில் நடந்திருக்கிறது. இதை டிடி-தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூருடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள டிடி, "ரன்பீர் கபூர் படத்தின் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கிய நிகழ்வு இன்று (ஜூலை 10) நடந்தது. பாலிவுட்டில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு திறமையான தமிழ் தொகுப்பாளர்களை இனி வரும் காலத்தில் அழைப்பார்கள் என நம்புகிறேன். அதற்கான ஒரு தொடக்கமாக இந்த நிகழ்வு அமையும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி கொடுத்த படக்குழுவுக்கு நன்றி.
இந்தப் படத்துக்காக ரன்பீருடன் நான் இணைந்து உருவாக்கியவற்றை விரைவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்" என்று மகிழ்வும் உற்சாகமும் கலந்து தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழில் கமல், விக்ரம், மாதவன், சூர்யா, நயன்தாரா எனப் பல முன்னணி நட்சத்திரங்களைப் பேட்டி எடுத்து அசத்திய டிடி இனிவரும் காலங்களில் இந்தி ஸ்டார்களையும் பேட்டி எடுத்து இந்திய அளவில் மின்னப்போகிறார் என்கிறார்கள் கோலிவுட் பாலிவுட் ரசிகர்கள்.