நடிகையாக அவதாரம் எடுக்கிறார் பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா
பிரபல நடன இயக்குனர் கலா, சினிமா நடிகையாக புது அவதாரம் எடுத்துள்ளார். நயன்தாராவின் படத்தில் முக்கிய வேடத்தில் கலா நடிக்கிறார்.
கடந்த 1982ம் ஆண்டில், தமிழ் சினிமாவில் நடன கலைஞராக தனது 'எண்ட்ரி'யை கொடுத்தவர், டான்ஸ் மாஸ்டர் கலா. தனது 12 வது வயதில், நடன உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளிவந்த, புன்னகை மன்னன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
பின்னர், கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து, நடன இயக்குனராகனார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு, அவர் நடனம் அமைத்து தந்துள்ளார். அத்துடன், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பாஜகவில் சேர்ந்து, நட்சத்திரப் பேச்சாளராக பிரசாரம் செய்தார்.
இந்த சூழலில், தற்போது முதல்முறையாக நடிகையாக கலா மாஸ்டர் அறிமுகமாக உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில், முக்கிய வேடமேற்றுள்ளார். சமந்தா், நயன்தாரா நடித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசை அமைக்கிறார்.
நயன்தாரா அழைத்ததால் நடிக்க முன்வந்ததாக கூறியுள்ள கலா, வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து நடிப்பதற்கு தயார் என்றும் கூறியுள்ளார்.