இத்தருணத்தில் அப்பா இல்லையே… வருந்தும் சுதா கொங்கரா..!

இயக்குநர் சுதா கொங்கரா, 'சூரரைப்போற்று' தேசிய விருது பெற்றமைக்காக, நெகிழ்வோடு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-07-27 16:15 GMT

இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சூர்யா.

தேசிய விருதுப் பட்டியலில் ஐந்து தேசிய விருதுகளை அள்ளி பெருமை சேர்த்த, 'சூரரைப்போற்று' படத்தின் படக்குழுவினர் அனைவருமே இவ்வெற்றியை பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என் தந்தையின் மறைவில் இருந்துதான் 'சூரரைப்போற்று' படத்தின் பயணம்தொடங்கியது. என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தபோது, வாசலில் நின்றிருந்த என்னை கடைசியாகக் கையசைத்து கூப்பிட்டார். அந்த நிகழ்வைத்தான் 'சூரரைப்போற்று' படத்திலும் ஒரு காட்சியாக வைத்திருந்தேன்.

ஓர் இயக்குநராக சொல்கிறேன், நம்மில் பலர், நம் வாழ்வில் நடந்த சிலவற்றை படத்தில் காட்சியாக வைக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள் என நினைக்கிறேன். அதன்படி, என் வாழ்வில் நடந்த பல தருணங்களை 'சூரரைப்போற்று' படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன், அதற்கு என் தந்தைக்கு நன்றி. எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், நான் தேசிய விருது வென்றதை என் தந்தையால் பார்க்க முடியவில்லையே என்பதுதான்.

என் குரு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. இன்று நான் இந்தநிலையில் இருப்பதற்கு மணி சார்தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் வெறும் ஜீரோதான். வாழ்க்கையைப் படமாக்க அனுமதித்த கோபிநாத் சாருக்கும், கோபிநாத்தாக வாழ்ந்த சூர்யாவுக்கும் மிக்க நன்றி. என் குடும்பத்துக்கு மிகப்பெரிய நன்றி" என்று நெகிழ்வோடு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News