பிச்சைக்காரன்- 2 திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி

பிச்சைக்காரன் -2 படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-05-05 08:12 GMT

பிச்சைக்காரன்-2 திரைப்பட போஸ்டர்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக இருந்து நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகான அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அவர் நடித்த சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் -2 என்ற படத்தில் நடித்து உள்ளார். அந்த படம் வெளியாக தயாராக உள்ள நிலையில், பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. நஷ்ட ஈடாக பத்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த தயாரிப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி, ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் - 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர், பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதே வேளையில் பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி சவுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News