செல்லப்பிராணியால் செலவா? உங்களது அக்கறைக்கு நன்றி - நடிகை ராஷ்மிகா 'நச்'

ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பில் படத்தரப்புக்கு கூடுதல் செலவு வைப்பதாக எழுந்த செய்திக்கு ட்வீட்டில் பதில் அளித்துள்ளார்.;

Update: 2022-06-26 06:55 GMT

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்யும்போது, அவர்களது உதவியாளர்களுக்கும் சேர்த்தே தயாரிப்புத் தரப்பு செலவு செய்வது வழக்கம். ஹோட்டல் அறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அதில் அடங்கும். இதனை ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்படும்.

அவ்வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உதவியாளர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான எண்ணிக்கையில் ஆட்களைக் கூட்டி வருவதாகவும் அதோடு, அவர் வளர்க்கும் நாய் அவரை விட்டு இருக்க முடியாது என்பதால் அதற்கும் சேர்த்து பயணச் செலவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தயாரிப்புத் தரப்பின் தலையிலேயே சுமத்துவதாக செய்திகள் றெக்கைகட்டிப் பறந்தன.

பொதுவாக விமானத்தில் நாய்களைக் கொண்டு வரும்போது அதற்கான எடை பார்த்துவிட்டு அது விமானத்தில் பயணிப்பதற்கு தகுதியானதா என்பன போன்ற பல்வேறு தகுதிச் சான்றிதழ்களைப் பார்த்துதான் அனுமதிப்பார்கள். அதுவும் எல்லா விமானத்திலும் செல்லப் பிராணிகளை ஏற்றிச் செல்வதில்லை. இந்த வகையில்தான், ராஷ்மிகா மந்தனாவால் தயாரிப்பாளருக்கு தலைச்சுமை அதிகம் என்று செய்தி நிறுவனம் ஒன்று செய்தி ஒன்றை தட்டிவிட்டது.

இதற்கு பதிலொன்றைப் பகிர்ந்த ராஷ்மிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'மன்னித்துவிடுங்கள்! என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்களது அக்கறைக்கு நன்றி. ஆனால், என்னுடைய செல்லப்பிராணியை நான் அழைத்து வர வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில், அதற்குப் பயணம் செய்வது என்பது சுத்தமாகப் பிடிக்காது. அது மிகவும் மகிழ்ச்சியாக ஹைதராபாத்தில் உள்ளது. அதனால் இதுபோன்ற செய்திகளை தவிர்த்து விடுங்கள். ஆனால், இந்தச் செய்தி என்னுடைய நாளை சிறப்பானதாக மாற்றியிருக்கிறது' என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Tags:    

Similar News