இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் நினைவு தினம்

இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் சித்ராலயா கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விஸ்வநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

Update: 2021-07-14 03:09 GMT

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928 ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார்.

இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விஸ்வநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​ வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.. இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.

உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள் . தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விஸ்வநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விஸ்வநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் .

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார்.

இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார் . 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விஸ்வநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் .

எம். எஸ். விஸ்வநாதன் 14 ஜூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.

Tags:    

Similar News