பார்ட்-2 படங்களின் கொண்டாட்ட காலம்... இயக்குநர் செல்வராகவனும் தயார்..!
இயக்குநர் செல்வராகவன், தனது 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்.
ஒரு காலத்தில் வெற்றிப் படங்களாக வரிசைகட்டி நின்று வசூல் சாதனை படைத்தப் படங்கள் பார்ட்-2 என அதன் இரண்டாம் பாகம் உருவாகி, ரசிகர்களை மீண்டும் இருமடங்காகக் கொண்டாட்டக் கொடியேற்ற வைத்திருக்கின்றன.
அதன் அண்மை உதாரணங்கள்தான் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' மற்றும் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் வெளியான நடிகர் யஷ் நடித்த 'கே.ஜி.எஃப்-2' . 'விக்ரம்' வெளியாகி மூன்றாவது வாரத்தில் வசூலில் சுமார் 350 கோடிகளைக் கடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் செல்வராகவனும் தனது 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் செல்வராகவன் இதுகுறித்து செய்தியாளர்களிடம், "என்னிடம் தற்போது, 'புதுப்பேட்டை -2' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் - 2' ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கான கதை தயாராக இருக்கிறது. எனவே, இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தை நான் இயக்குவேன். அதில், 'புதுப்பேட்டை 2' முதலில் வரும். அதன்பிறகு, 'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டாம் பாகம் தயாராகும்" என்று தெரிவித்தார். தற்போது, இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.