'கேப்டன்' படம் எனக்கு புது அனுபவம்: நடிகர் ஆர்யா
'கேப்டன்' படத்தின் ட்ரெயிலர் வெளியானது. படம் குறித்து நடிகர் ஆர்யா தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
'கேப்டன்' - இது ஆர்யா ராணுவ வீரராக நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் படம். ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து திங்க் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அத்துடன், ஹாலிவுட்டில் அர்னால்ட் நடிப்பில் வெளியான 'பிரிடேட்டர்' படத்தின் தமிழ் வெர்ஷனைப் போல இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.
இந்தநிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, "ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளதுதான் 'கேப்டன்' திரைப்படம். 'சூப்பர் மேன்', 'ஸ்பைடர் மேன்' போல இப்படத்தின் பல காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக உருவாகியுள்ள இப்படம், கோலிவுட்டில் புது முயற்சியாக இருக்கும்.
மேலும் இப்படம், சிறுவர்களை அதிகமாக கவரக்கூடிய படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் பல காட்சிகள் அதிகப்படியான நாட்கள் அடர்த்தியான வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது எனக்கு புது அனுபவமாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், திரைத்துறை பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது. முன்பெல்லாம் திரையரங்குகளில் காட்சிகள் மிக குறைவாக வெளியானது. ஆனால், தற்போது அதிகக் காட்சிகள் திரையிடப்படுவதால், படம் வெளியாகி 100 நாட்களில் கிடைக்கின்ற வசூல், இரண்டே நாட்களில் கிடைத்துவிடுகிறது. லாபக் கணக்கைப் பார்க்க அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. காட்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே வசூலும் கணக்கிடப்பட்டுவிடுகிறது" என்று தெரிவித்துள்ளார்.