'நித்ய ஹரித நாயகன்' பிரேம் நசீர் பெர்த் டே டுடே.
உலகப் புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், திரையுலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய பிரேம் நசீர் பிறந்த தினம்;
பிரபல மலையாள நடிகர், உலகப் புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், திரையுலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவருமான பிரேம் நசீர் (Prem Nazir) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 7).
கேரளாவில் உள்ள செரியன்கேழு என்ற ஊரில் (1929) பிறந்தார். இயற்பெயர் அப்துல் காதர். சிறுவயதிலேயே தாயை இழந்தார். கதினம்குளம், சித்திரவிலாசம் உள்ளிட்ட பள்ளிகளில் பயின்றார்.
ஆலப்புழை எஸ்.டி. கல்லூரி, சங்கணாச்சேரி எஸ்.பி. கல்லூரி யில் பயின்று, பி.ஏ. பட்டம் பெற்றார். படிப்பின்போதே, பல நாடகங்களில் நடித்து பாராட்டு பெற்றார். படிப்பை முடிக்கும்போது, கைதேர்ந்த நாடகக் கலைஞராக மாறியிருந்தார்.
40 பள்ளிகள் பங்கேற்ற நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். இவரது நடிப்புத் திறனைக் கண்ட பட அதிபர் பால் கல்லுங்கல், 'மருமகள்' என்ற மலையாளப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படம் 1952-ல் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது.
அதே ஆண்டிலேயே 'விசப்பின்டெ விளி' படத்தில் நடித்தார். அப்போதுதான் இவரது பெயர் பிரேம் நசீர் என மாற்றப்பட்டது. 1954-ல் வெளிவந்த 'அவகாசி' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இது தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டது.
அதில் குதிரை சவாரி, கத்திச்சண்டை என ஆக் ஷன் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழிலும் வாய்ப்புகள் தேடிவந்தன. 'இருளுக்குப் பின்' என்பதுதான் இவரது முதல் தமிழ் திரைப்படம். ஆரம்பம் முதலே, தமிழ் திரைப்படங்களில் சொந்தக் குரலில், அருமையான உச்சரிப்புடன் பேசி நடித்தார்.
தமிழில் இவர் நடிக்க வந்த காலக்கட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜிகணேசன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருந்தாலும் 'தை பிறந்தால் வழி பிறக்கும்', 'நான் வளர்த்த தங்கை', 'கோவில்', 'உலகம் சிரிக்கிறது', 'வண்ணக்கிளி', 'பாலும் பழமும்', 'பிறந்த நாள்', 'முரடன் முத்து' உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால், தமிழில் கவனம் செலுத்த இயலவில்லை.
மலையாளத்தில் இவருக்குப் பெரும்பாலும் பின்னணி பாடியது கே.ஜே.ஜேசுதாஸ். 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்தது இவரது சாதனை. நடிகை ஷீலாவுடன் மட்டும் 130 படங்களில் நடித்திருக்கிறார். இந்த இரண்டுமே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
80 நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். 1979-ம் ஆண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட படங்களைக் கொடுத்தவர். மலையாளத் திரையுலகில் தொடர்ந்து 35 ஆண்டுகாலம் வெற்றிக் கதாநாயகனாக, முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் ஆகிய சாதனைகளுக்கும் சொந்தக்காரர். ஒருசில கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
எத்தகைய வேடத்தையும் ஏற்று அநாயசமாக நடித்தவர். 33 படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். உடன் நடிக்கும் நடிகைகள் மீது நல்ல மரியாதை கொண்டிருந்தார், அவர்களது தனித் திறமை, நடிப்பை மனம்திறந்து பாராட்டுவார். பத்ம , பத்மபூஷண் விருதுகளை வென்றுள்ளார்.
இறுதிவரை இளமை குன்றாத எழில் தோற்றத்துடன் கதாநாயகனாக நடித்ததால், மலையாள ரசிகர்களால் 'நித்ய ஹரித நாயகன்' (எவர் க்ரீன் ஹீரோ), 'நித்ய வசந்தம்' என்று போற்றப்பட்டவர். சினிமாவை ஆழமாக நேசித்தார். ஓய்வு ஒழிச்சல் இன்றி நடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 60-வது வயதில் (1989) மறைந்தார்.