பாரத நாட்டுக் கலைச்செல்வி செல்லப்பிள்ளை நடிகை ஸ்ரீவித்யா பிறந்த தினம்
கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள் பாரத நாட்டுக் கலைச்செல்வி நடிகை ஸ்ரீவித்யா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.;
கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள் பாரத நாட்டுக் கலைச்செல்வி நடிகை ஸ்ரீவித்யா பிறந்த தினம்
ஸ்ரீவித்யா கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970 களில் இருந்து நடித்து வந்தார். 2003 ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006 , அக்டோபர் 19 ஆம் தேதி இறந்தார்.
கர்நாடக இசையை தன் தேன் குரலால் உலகம் முழுவதும் பரப்பிய தேவகானக் குயில் எம்.எல்.வசந்தகுமாரிக்கும், பல குரல் வேந்தனாய்த் திகழ்ந்த விகடம் கிருஷ்ன மூர்த்திக்கும் 1953 ம் ஆண்டு செல்வமகளாய்ப் பிறந்து. செல்ல மகளாயும் திகழ்ந்தவர். சென்னையில், மிகப் பிரசித்தமான மைலாப்பூர் பகுதியில் பிரம்மாண்டமான தனது இல்லத்தில் வசதியுடன் இளம் பருவ வாழ்க்கையைத் தொடங்கினார்.
நாட்டியப் பேரொளி பத்மினி சகோதரிகள் இவரின் எதிர்வீட்டில் வசித்ததால் எப்போதும் அவரின் தத்துப்பிள்ளை போன்றே வளர்க்கப்பட்டார். 4 தாய்களின் செல்லப்பிள்ளை எண்றும் இவரைக் கூறலாம். திரைப்படத் துறையில் தங்களது அழகிய முகத்தாலும், மந்தகாச மேனியாலும், கொஞ்சும் குரலாலும், குறையில்லாத நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, கவர்ந்து, தங்கள் வசம் இழுத்துக் கொள்பவர்கள் நடிகைகள்.
இவை அனைத்தும் ஒன்றாகப் பெற்று கலைத் துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் மிகச் சிலரே. அதில் ஸ்ரீவித்யாவிற்கு அப்படிச் சில பேர்களில் நம் மனதில் தனி இடம் கொடுத்து நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒரு சிறந்த நடிகைதான் ஸ்ரீவித்யா. சகல அம்சங்களுடனும் நம் தமிழ்த்திரை உலகில் மட்டுமில்லாமல் தென்னக திரைஉலகம் முழுமையுமே ஆக்கிரமித்து தன் விஸ்வரூப நடிப்பால் வியாபித்து சகல ரசிகர்களையும் தனக்கென சம்பாதித்து வைத்திருந்த ஸ்ரீவித்யா நாடு தழுவிய பட்டங்களையும் பரிசுகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்பதும் உண்மை.
புகழின் உச்சிக்குச் சென்ற ஸ்ரீவித்யா தனக்கென ஒரு துணையைத் தேடும் முயற்சியில் இறங்கினார். அங்குதான் அவரின் கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனம் அவரை ஏமாற்றி மன வாழ்க்கையில் குப்புறத் தள்ளியது. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவரை தான் திருமணம் செய்வதாகவே தீர்மானித்து விட்டதாக தன் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறியபோது அவர்கள் அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் அவரைப் பார்த்துள்ளனர்.
காரணம், ஆச்சாரமான பிரபல இந்துக் குடும்பத்தில் பிறந்துவிட்ட நிலையில் கொஞ்சமும் தொடர்பே இல்லாத ஒரு நபரைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது எப்படி என்று குழப்பமடைந்து அவரிடம் மறு பரிசீலனை செய்யும் படிக்கேட்க அவரோ தன் முடிவில் மிகத் தீர்மானமாக இருந்துவிட்டார். விதியின் விளையாட்டை வெறும் மனிதர்களா மாற்றிவிட முடியும்?
கடுமையான பல எதிர்ப்புகளை எல்லாம் மீறி நடந்து முடிந்தது இவர்களின் திருமணம்.
அதுவும் பின் நாளில் இவருக்குப் பல வழிகளில் தொல்லைகளை வழங்கும் வகையான கிறிஸ்டியன் சிரியன் என்ற கிறித்துவ முறைப்படி மும்பையில்.1978 ம் ஆண்டு நடந்தது. கணவர் ஜார்ஜ் தாமஸ் நடிகர் திலகம் சிவாஜிகனேசன் நடித்த தீபம் உட்பட சில படங்களைத் தயாரித்தவர்.
9 வருட காலம் வரை மட்டுமே போராட்டத்துடன் ஓடிய இவர்களின் தாம்பத்ய வாழ்க்கை ஒரு கட்டத்தில் 1987 ம் ஆண்டு சோகமான பிரிவில் முடிந்தது. தன் கணவனுக்கு எதனால் தன் மீது காதல் ஏற்ப்பட்டது? ஏன் பிரிந்து செல்ல முடிவெடுத்தார்? ஏன் திருமணத்தை மும்பையில் சிரியன் கத்தோலிக்க முறையில் நடத்தினார்? என்றெல்லாம் பதிலே கிடைக்காத கேள்வியின் நாயகனாக தன் கணவன் அமைந்ததையும் ""இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை தான் திருமணம் என்ற பெயரில் நடத்தி முடித்ததையும் எண்ணி மனம் வாடினார் ஸ்ரீவித்யா.
தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று ""பாரத நாட்டுக் கலைச்செல்வி ""யின் செல்லப் பிள்ளையாகவே வலம் வந்தவர். ஆனால் விதியின் வசமான அவரின் 35 வயதைத் தாண்டிய வாழ்க்கை அவரின் முந்தைய குதூகல நிலையிலிருந்து அவரை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
மணவாழ்வும் பொய்யாகி எல்லாம் சூன்யமான நிலையில் தனக்கச் சொந்தமான திரண்ட சொத்துக்களை என்ன செய்வது என்ற தீவிர யோசனையில் ஆழ்ந்தார் ஸ்ரீவித்யா. வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்டவர்களின் வளமான எதிர்காலம் கருதி ஒரு சிறப்பான முடிவை எடுத்தார்.அதன் படி தனக்கான சொத்து முழுமைக்குமான உயிலை எழுதினார். அந்த உயிலின் படி பல கோடி ரூபாய் மதிப்புக்கான தனது அசையும் மற்றும் அசையாச்சொத்துக்களையும் தன் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத் தொகைகளையும் காட்டி இவைகளில் விற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் விற்று ரொக்கத் தொகையுடன் கூட்டி மொத்தத்தையும் ஒரு ட்ரஸ்ட்டின் மூலமாக வங்கியில் டெபாசிட் செய்யும் படியும் அந்தத்தொகை பெரும்பாலும் தான் விரும்பியுள்ளபடி இசை மற்றும் நடனம் கற்பிக்கும் பள்ளிகளில் அவற்றில் அதிகத்திறமையும் அதே சமயம் வசதியற்றும் உள்ள மாணவர்களைச் சேர்த்து பயிற்சி அளிக்க வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
2006ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அவரால் கையொப்பமிடப்பட்டுள்ள இந்த உயிலில் மேற்கூறிய செயல்பாடுகள் அனைத்துமே கேரள மானிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழுத்தக்கோட்டில் தாகூர் நகரில் வசிக்கும்திரு கே.பி.கணேஷ்குமார் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கே.பி.கனேஷ் குமார்தான் சில நாட்கள் முன்புவரை கேரளா மானில கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அமைச்சராகப்பணியாற்றி வந்தவர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
தற்போது தனது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ப்ரச்சனையில் ஈடுபட்டு கைகலப்பாகி மீடியாக்களில் பரபரப்பாகிவிட்ட கேரள எம்.எல்.ஏ தான் இந்த கே.பி.கனேஷ் என்பவர். சொந்தத் தந்தையையே எதிர்த்து கட்சி நடத்தியவர். தன் தந்தையை ஏமாற்றி குடும்பச் சொத்து அனைத்தயும் பிடுங்கிக் கொண்டவர். தன் பதவிக்காக அடிக்கடி பல கட்சிகள் மாறியவர். சொந்த மனைவியை விட்டு விட்டு தன் மகனின் நண்பனாய் இருந்தவனின் தாயையே சேர்த்துக்கொண்டு குடும்பமும் மும்மாளமுமாய் இருந்து வந்தவர். அதனால் தன் அரசியல் வாழ்க்கையே தற்போது ஆட்டம் கண்டு போய் இருப்பவர்.
இவ்வளவு கபட நோக்கமும் செயல்பாடுகளும் கொண்ட ஒரு நபரை நம்பி எப்படி ஸ்ரீவித்யா அவரது முழுப்பொறுப்பில் இந்த உயில் பொறுப்பை ஒப்படைத்தார், இந்த நிர்ப்பந்தம் அவருக்கு எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது என்பதெல்லால் புரியாத புதிராகவே உள்ளன.