எளிய மனிதர்களையும் திரையில் உலவவிட்ட பாரதிராஜா..!
இயக்குநர் பாரதிராஜா. வயது எண்பதைக் கடந்தும் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இவருக்கு 'இன்றும்' பிறந்தநாள்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு இரட்டைப் பிறந்தநாள். ஆம். ஆகஸ்ட் 23 என்பதுதான் அவரது உண்மையான பிறந்தநாள். ஆனால், பள்ளிச் சான்றிதழ்படி ஜூலை 17 என்பது அவரது பிறந்தநாள். ஆனாலும், இரண்டு நாளுக்கும் வஞ்சனையின்றி இரண்டு நாட்களையும் எளிமையாகக் கொண்டாடி வருகிறார் என்பதுதான் யதார்த்தம். அவ்வகையில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இன்றும் பிறந்தநாள்.
தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தின் அல்லி நகரம்தான் பாரதிராஜாவின் பிறந்த ஊர். 1941-ம் ஆண்டு பெரியமாயத் தேவருக்கும் கருத்தம்மாவுக்கும் பிறந்த ஐந்தாவது மகன்தான் இவர். சின்னசாமி என்பதுதான் பெற்றோர் இவருக்கு இட்ட இயற்பெயர். பின்னாளில் இவரே தனது பெயரை பாரதிராஜா என்று மாற்றிக் கொண்டார்.
சொந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்த பாரதிராஜாவுக்கு, பள்ளிப் பருவத்திலேயே தமிழ் இலக்கியங்கள் மீது தாகம் தீராத காதலுண்டு. அதன்விளைவாக கதை, நாடகம் என தன் படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டார். விளைவு... ஊர் திருவிழாக்களில் தான் எழுதிய நாடகங்களை மேடையேற்றி இயக்கியும் நடித்தும் அழகு பார்த்தார்.
படிப்பு முடித்தவுடன் தொடக்கத்தில் ஊரிலேயே சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பாரதிராஜா தனக்கிருந்த கலைத் தாகத்தினால் சென்னைக்கு பயணப்பட்டார். சென்னைக்கு வந்ததும் வானொலி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், பெட்ரோல் பங்கில் பணி என வாழ்வியல் தேவைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டே திரைத்துறையில் தனக்கான இடத்தை நோக்கிய முயற்சிகளையும் முன்னெடுத்து வந்தார்.
தனது முனைமுறியாத முயற்சியின் பலனாக முதல் வெற்றியை அடைந்தார் பாரதிராஜா. ஆம். இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்து திரைத்துறையில் தன் முதல் தடம் பதித்தார். அதன்பிறகு, பிரபல கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து தனது திரைப் பயணத்தை விசாலமாக்கினார்.
இந்தநிலையில், 1977-ம் ஆண்டு தனது கனவின் நனவுத் தொடக்கமாக '16 வயதினேலே' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாரதிராஜா. முதல் படத்திலேயே முழுக்க முழுக்க கிராமத்தையும் கிராமத்தின் எளிய மனிதர்களையும் கதை மாந்தர்களாக்கி திரையில் உலவவிட்டார். இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். வழக்கமான பல நடைமுறைகளைப் புரட்டிப் போட்டு, புதிய பாதையை அமைத்தார்.
தான் இயக்கிய முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய முன்னணி நட்சத்திரங்களை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பிரமிப்பை உண்டாக்கினார். படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்ததோடு, தமிழ்த் திரையுலகம் பாரதிராஜா என்றொரு ஜாம்பவானை வரலாற்றின் பக்கங்களில் வரித்துக் கொண்டது.
அதன்பிறகு, தொடர்ந்து பாரதிராஜாவுக்கு ஏறுமுகம்தான். நடிகர், நடிகையர்களுக்கு ரசிகர்களாக இருந்து அவர்களது படங்களின் வெளியீட்டில் உற்சாகமாகிக் கொண்டாடி வந்த ரசிகர்கள் கூட்டம் இயக்குநர்களின் ரசிகர்களாக மாறிப்போனது இவருக்குப் பிறகுதான். 'சந்திர லீலாவதி'யைத் திருமணம் செய்துகொண்ட பாரதிராஜாவுக்கு 'மனோஜ்' என்றொரு மகனும், 'ஜனனி' என்றொரு மகளும் உள்ளனர்.
'16 வயதினிலே' (1977) படத்தைத் தொடர்ந்து 'சிகப்பு ரோஜாக்கள்' (1978), 'கிழக்கே போகும் ரயில்' (1978), 'நிறம் மாறாத பூக்கள்' (1979), 'நிழல்கள்' (1980), 'அலைகள் ஓய்வதில்லை' (1981), 'புதுமைப் பெண்' (1983), 'மண் வாசனை' (1983), 'ஒரு கைதியின் டைரி' (1984), 'முதல் மரியாதை' (1985), 'கடலோரக் கவிதைகள்' (1986), 'வேதம் புதிது' (1987), 'ஆராதனா' (1987), 'கொடி பறக்குது' (1989), 'புது நெல்லு புது நாத்து' (1991), 'நாடோடி தென்றல்' (1992), 'கிழக்குச் சீமையிலே' (1993), 'கருத்தம்மா' (1995) உள்ளிட்ட திரைப்படங்களைப் படைத்து தனது புகழின் உயரத்தைக் கூட்டிக்கொண்டார் பாரதிராஜா.
திரைத்துறையில் பல்வேறு விருதுகளையும் பெற்று பெருமை கொண்டார். குறிப்பாக, 2004–ம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது பெற்றார். இதற்கான அடித்தளமாக 1982-ல் 'சீதாகொகா சிகே', 1986-ல் 'முதல் மரியாதை', 1988-ல் 'வேதம் புதிது', 1995-ல் 'கருத்தம்மா', 1996-ல் 'அந்தி மந்தாரை', 2001-ல் 'கடல் பூக்கள்' போன்ற திரைப்படங்களுக்காக 'தேசிய விருதை' வென்றுள்ளார்.
மேலும், 1978–ல் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்திற்காக 'ஃபிலிம்பேர்' விருதும் 1977-ல் '16 வயதினிலே', 1979-ல் 'புதிய வார்ப்புகள்', 1981-ல் 'அலைகள் ஓய்வதில்லை', 2003-ல் 'ஈர நிலம்' போன்ற திரைப்படங்களுக்காக தமிழக அரசின் மாநில விருதுகளையும் பெற்றார்.
அத்துடன், தமிழக அரசின் 'கலைமாமணி' விருது. 1981–ல் 'சீதாகொகா சிலுகா' திரைப்படத்திற்காக ஆந்திரப்பிரதேச அரசிடம் இருந்து 'நந்தி விருது' என்று விருதுகள் பெற்று தமிழ்த் திரையுலகத்துக்கு பெருமை தேடித் தந்த பாரதிராஜா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநராக மட்டுமின்றி நடிப்பிலும் பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு. 1980ம் ஆண்டே தனக்கான ஒரு கதையை எழுதி நிவாஸை இயக்குநராக்கி 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன்பிறகு, இயக்குநராகவே கவனம் செலுத்தி வந்த பாரதிராஜா, இயக்குநர் மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' படத்தில் மிரட்டலான அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதோடு, மறைந்த இயக்குநர் தாமிரா இயக்கிய 'ரெட்டைச்சுழி' படத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் உடன் இணைந்து போட்டி போட்டு நடித்திருப்பார். தொடர்ந்து 'பாண்டியநாடு', 'குரங்கு பொம்மை', 'சீதக்காதி' என பல்வேறு படங்களில் நடித்து வரும் பாரதிராஜா, வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக உள்ள தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்துள்ளார்.
அண்மையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் மற்றும் பாரதிராஜா இருவரும் பேசிக் கொள்ளும் ஒரு வசனக் காட்சியையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். வயதாகி விட்டதே ஓய்வெடுப்போம் என்றெல்லாம் நினைக்காமல் உயிர் உள்ளவரை கலைக்காகவே என பயணித்து வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இன்று 81வது பிறந்தநாள்.
வாழ்த்துகள் சார்..!