நடிகர் அல்லுஅர்ஜூனுக்கு ''சிறந்த இந்தியன்'' விருது
Telugu Actor Allu Arjun -தெலுங்குப் பட உலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், சிறந்த இந்தியன் விருது பெற்றார்.;
Telugu Actor Allu Arjun -தெலுங்குப் பட உலகின் முன்னணி நாயகனான ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், 'புஷ்பா' படத்துக்குப் பிறகு, ஆந்திரா, தெலங்கானாவில் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியா முழுவதிலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். அத்துடன் அவருக்கு தொடர்ந்து பல்வேறு விருதுகள் குவிந்த வண்ணம் உள்ளன என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இப்போது, அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல் நடிகர் அல்லு அர்ஜுன் சிறந்த இந்தியன் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், வெளியான திரைப்படம் 'புஷ்பா: தி ரைஸ்', பெருவாரியான வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்து, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். படத்தின் நாயகனாக அல்லு அர்ஜுன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அத்துடன் படத்தில் ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பரவி ஹிட்டானது. 'ஊ.. சொல்றியா மாமா…' பாடலும் நடிகை சமந்தாவின் ஆட்டமும் இன்றும் வரவேற்பு குறையாமல் வைரலாகிக் கொண்டுள்ளது.
செம்மரக் கடத்தலை பின்னனியாகக் கொண்டு வணிக ரீதியிலான நோக்கில் உருவான 'புஷ்பா' படத்துக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆர்ப்பரிப்பும் ஆரவாரமும் மிகப் பெரிய வரவேற்புக்கு வித்திட்டது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் சாதனை படைத்தது என்பதுதான் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்தது. 'புஷ்பா' படம் தொடங்கப்படும் போதே, இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என்று முன்னதாகவே படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, முதல் பாகம் 2021ல் வெளியாகி வெற்றிப் பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகமும் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகததிலும் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், ஃபஹத் பாசில் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் இரண்டாம் பாகத்துக்கு இப்போதே ரசிகர்களிடம் ஏராளமான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டுள்ளது. இரண்டாம் பாகத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், 'புஷ்பா' படத்தின் வெற்றியை அழுத்தமாக அங்கீகரிக்கும் வகையில் அடுத்தடுத்து விருதுகள் கிடைத்து வருகின்றன. சைமா விருது விழா, ஃபிலிம்பேர் விருது விழாக்களில் 'புஷ்பா' படத்திற்கு பல பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. அதேபோல், நடிகர் அல்லு அர்ஜுனும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்று அசத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து அண்மையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற வருடாந்திர அணிவகுப்பில் இந்தியாவின் கிராண்ட் மார்ஷல் என்று 'புஷ்பா' படத்துக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
மேலும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பொழுதுப்போக்குப் பிரிவில் '2022ம் ஆண்டின் சிறந்த இந்தியன்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த விருதை நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கினார். தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் வழங்கப்பட்ட இந்த விருது, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மேலும் கெளரவத்தை கொடுத்துள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். மேலும், விருது வழங்கிய தனியார் ஊடகம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் வந்தவண்ணம் உள்ளன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2