'பனாரஸ்' - உணர்வுகளைப் பேசும் படம் - தயாரிப்பாளர் நெகிழ்ச்சி…!

கன்னடத்தின் 'பனாரஸ்' பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லருடன், வெளியீட்டு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2022-09-29 11:48 GMT

இந்திய அளவில் கன்னடப்படங்களின் மீதான கவனம் திரும்பியிருக்கின்ற நிலையில், மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிற படமாக 'பனாரஸ்' படத்தின் மீது எல்லோருடைய பார்வையும் பதிந்துள்ளது.

இப்படத்தின் பிரமாண்ட ட்ரெயிலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், 'பனாரஸ்' படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், நாயகன் ஜையித் கான், நாயகி சோனல் மாண்டீரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் 'பனாரஸ்' படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுப் பேசிய நடிகர் ரவிச்சந்திரன்,' அண்மைக் காலமாக கன்னட சினிமா இந்திய அளவிலும் உலக அளவிலும் வெற்றி பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த வரிசையில் இந்த 'பனாரஸ்' படமும் மாபெரும் வெற்றிபெறும் என்பது இப்படத்தின் ட்ரெயிலரைப் பார்த்தாலே தெரிகிறது" என்றார்.

தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால் பேசும்போது, 'வீட்டிலிருந்து இந்நிகழ்ச்சிக்குப் புறப்பட்டபோது என் மனைவி விழாவில் உணர்ச்சி வசப்படாமல் நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். ஆனால், என்னால் அப்படி உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் இப்படம் முழுக்க முழுக்க உணர்வுகளைப் பேசும்படம்" என்றார்.

நாயகி சோனல் மாண்டீரோ பேசும்போது " இதற்கு முன் சுமார் 10 படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும் இது என் வாழ்வின் முக்கியமான படம். இவ்வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு என் மனத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன்" என்றார்.

இயக்குநர் ஜெயதீர்த்தா பேசும்போது, "இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன். அதனால் எனக்கு நிரந்தர ரசிகர்கள் இல்லை. இந்த 'பனாரஸ்' படமும் அப்படிப்பட்ட முற்றிலும் ஒரு ஜானர் வகையறா படம்தான். இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம். இதுவொரு யுனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்'' என்றார்.

அடுத்து பேசிய பனாரஸ் நாயன் ஜையத் கான்," நான் அரசியல் குடும்பத்துப் பிள்ளை என்பதால் சினிமாத் துறைக்கு வருவதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அப்பா நான் சினிமாவுக்குள் வருவதை கடுமையாக எதிர்த்தார். அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து கன்வின்ஸ் செய்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு மேல் தூங்கியதே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்த 'பனாரஸ்' படம் என்பது காசியின் புனிதம் கலந்த காதல் கதை" என்றார்.

'பனாரஸ்' வரும் நவம்பர் 4ம் தேதியன்று கன்னடம், தமிழ்,மலையாளம், தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த கால கன்னடப் படங்களின் வெற்றியைப் போலவே இப்படமும் வெற்றியில் சாதனை படைக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடுதலாகவே உள்ளது.

Tags:    

Similar News