AK63 அந்த இசையமைப்பாளருடன் மீண்டும் இணையும் அஜித்..!
அஜித்குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் புதிய படம் குட் பேட் அக்லியின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் அட்டகாசமான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.;
அஜித்குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் புதிய படம் குட் பேட் அக்லியின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் அட்டகாசமான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
அஜித்குமாரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதும், அந்த படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுபோக கூடுதலாக இந்த படத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. சில பிரச்னைகள் காரணமாக இந்த படம் கிடப்பில் போடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் அஜித்குமார் அடுத்த படத்துக்கு செல்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்
தமிழில் இனிது இனிது காதல் இனிது படத்தில் இவரது இசையில் பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், நேரடியாக இவர் இசையமைத்தது விஜய்யின் சச்சின் படத்தில்தான். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆன நிலையில், அடுத்து ஆறு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், விஜய்யுடன் வில்லு, விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் குட்டி, வேங்கை, சூர்யாவுடன் மீண்டும் சிங்கம், சிங்கம் 2, கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் என பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க, அஜித் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வீரம் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில், அடுத்து தெலுங்கு பக்கமாக ஒதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த காலக்கட்டத்தில் புலி, சாமி 2 மட்டுமே இவரது தமிழ் படமாக இருந்தது.
புஷ்பா
இந்நிலையில்தான் புஷ்பா திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ஊ சொல்றியா ஊஊ சொல்றியா பாடல் ஒலிக்க, தமிழில் அடுத்தடுத்து படங்களில் புக் ஆனார் தேவி. தற்போது விஷால் நடிக்கும் ரத்னம், சூர்யா நடிக்கும் கங்குவா, அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் இசையமைக்கிறார்.
அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்துக்கும் இவர்தான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் விஜய், அஜித், சூர்யா என மூன்று நடிகர்களின் படங்களும் வரிசையாக இவரது இசையில் வெளியாக இருக்கிறது.
அஜித் 1, 2 ,3
நடிகர் அஜித்குமார் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம். அதிலும் வரலாறு படத்துக்கு பிறகு மீண்டும் 3 வேடங்களில் தோன்ற இருக்கிறார் என்கிறார்கள். இது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தின் ஒன் லைன் ஸ்டோரிதான் எனவும் பேச்சு அடிபடுகிறது. அதற்காகவே இந்த படத்தின் கதையை மீண்டும் திருத்தி எழுதியிருக்கிறாராம் ஆதிக்.
கிட்டத்தட்ட அதே லைன்தான் என்றாலும் படம் அப்படியே இருக்கப்போவதில்லை என்கிறார்கள். காரணம் இந்த படத்தின் ஒன் லைன் சிறப்பாக இருந்தாலும், படம் அதே கதையைப் போல இருந்தால் அதுவே நெகடிவ்வாக அமைந்துவிடும் என்பதால், முற்றிலும் இளமைப் புதுமையான அஜித் கதாபாத்திரத்தை கதைக்குள் இணைத்துள்ளாராம் ஆதிக். இந்த படத்துக்காகத்தான் அஜித்குமார் உடலைக் குறைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
'AK63' போஸ்டர் வடிவமைத்தது யார்?
'AK63' திரைப்படத்தின் போஸ்டரை வடிவமைக்கும் பொறுப்பு டியூனி ஜான் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'பேட்ட', 'புஷ்பா', 'கேப்டன் மில்லர்' போன்ற வெற்றித் திரைப்படங்களுக்கு போஸ்டர் வடிவமைத்த அனுபவம் இவருக்கு உள்ளது. அஜித் குமாரின் படத்திற்கு அவர் எப்படிப்பட்ட கலைநயம் ஊட்டுகிறார் என்பதை ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
'AK63' திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பதும் தற்போது அரசல் புரசலாக வெளிவந்த தகவலாக இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்து காண்போம்.
'விடாமுயற்சி' என்னாச்சு?
'விடாமுயற்சி' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 'வேட்டையன்' (ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம்) படப்பிடிப்புக்குப் பிறகு தான் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அஜித் குமார் ரசிகர்களுக்கு தற்போதைக்கு அவரின் அடுத்த திரைப்படமான 'AK63' மீது தான் கவனம் செல்லும்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் விடாமுயற்சி. இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த படப்பிடிப்பு அவ்வப்போது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்படுவதாக இருந்தது. அப்படி இம்முறை பணப்புழக்கம் காரணமாக லைகா இந்த படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது.