மீண்டும் டிராக்கில் அஜித்! வைரலாகும் கார் வீடியோ!
மீண்டும் அஜித்குமார் டிராக்கில் கார் ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.;
நடிகர் அஜித்குமார் கார் ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. டிராக்கில் கார் ஓட்டும் இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்போது இந்திய அளவில் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது.
அஜித் ரசிகர்களுக்கு காலையிலேயே கண்களுக்கு குளிர்ச்சியான ஒரு வீடியோ வைரலாகி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் ரேஸ் ஓட்டிய காட்சிதான் அது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது சினிமாவில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, பைக் ரேஸிலும் மிகுந்த கவனம் வைத்துள்ளார். இதற்கென தனி நிர்வாகமே ஏற்படுத்தி அதனை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கார் ரேஸ் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக, அஜித் ரசிகர்களுக்கு இதுதான் தாமதம் என அந்த வீடியோவை ஏகபோகத்துக்கு ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
AK 🏎️
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 26, 2024
pic.twitter.com/hNAP1cnWLJ
இந்தியாவில் இதுபோன்ற, சிறந்த தொழில்நுட்பங்கள் குறைவு என்பதாலும், துபாயில் அவர் சொந்தமாக வீடு வைத்திருப்பதாலும், அஜித் சினிமா ஷூட்டிங் நேரங்கள் தவிர்த்த மற்ற நேரங்களில் துபாயிலியே இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு கார், பைக் ரேஸ் நிகழ்ச்சிகளில் சமீப நாட்களில் அதிகம் பங்கேற்கிறாராம். கடந்த வாரம் இதுபோன்ற ரேஸ் டிராக் மற்றும் கார் அருகில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். அந்த புகைப்படங்களின் ரீச் எந்த அளவுக்கு இருந்தது என்றால் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டங்களையே மறந்து அவர்கள் அஜித் ரசிகர்களுடன் சண்டைக்கு செல்லும் அளவுக்கு இருந்தது.
இந்நிலையில், அஜித்குமார் அந்த புகைப்படங்களை மட்டும் எடுக்க வில்லை, அவர் கார் ஓட்டியிருக்கிறார் எனவும் அதோடு சேர்த்த ஒரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த வாரம் அவர் கார் ஓட்டிய வீடியோவாகத் தான் அது இருக்கும். தாமதமாக இப்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
பிஎம்டபுள்யூ எம் காம்படிஷன் என்று அழைக்கப்படும் இந்த காரை உலகில் தலைசிறந்த ரேஸ் கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த காரை எடுத்து ஓட்டும் அஜித்தின் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என அஜித் ரசிகர்கள் குறிப்பிட்டு இந்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அஜர்பைஜானில் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் கடைசிக் கட்ட காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அஜித்குமார் - அர்ஜூன் இடையேயான சண்டைக் காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அர்ஜூன் தனது மகள் திருமணத்துக்காக கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில்தான் இருக்கிறாராம். அதேநேரம் அஜித் - ஆரவ் - திரிஷா பங்கேற்ற காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக தெரிகிறது.
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு கிட்டத்தட்ட உறுதியாக்கியுள்ளது. நெட்பிளிக்ஸின் நிபந்தனைக்கு உட்பட்டு வேறு வழியில்லாமல் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 30 ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வருவதென திட்டமிட்டுள்ளனராம். அதற்குள் மகிழ் திருமேனி படத்தை முடித்துவிட வேண்டும். அஜித்தின் போர்சன்கள் சில தினங்களில் முடிவுக்கு வர இருக்கிறதாம். அடுத்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்துக்கு செல்ல இருக்கிறார்.