நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது சொத்து அபகரிப்பு புகார்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் நிலையத்தில் சொத்து அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.;
நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் மாமனார் மீது திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு தனது நீண்டகால காதலரும் பிரபல திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று கொண்டதாக அறிவித்தனர்.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் உறவினர்கள் திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று திடீர் என வந்தனர். அவர்கள் அங்கு விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து, தாயார் மீனாகுமாரி மற்றும் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோர் மீது புகார் மனு அளித்தனர்.
விக்னேஷ் சிவனின் தந்தை தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும், எனவே நான்கு பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.