இரட்டைக் குழந்தைகளுடன் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் தலை தீபாவளி
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களின் இந்த ஆண்டு தலை தீபாவளியை, இரட்டைக் குழந்தைகளுடன் கொண்டாடினர்.;
அண்மையில், வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களுக்கு குழந்தைகள் பிறந்ததை இணையத்தில் வெளியிட்டனர். இச்செய்தி வெளியானவுடன், இருவருக்கும் திருமணமாகி நான்கே மாதங்கள் கடந்த நிலையில், குழந்தைகள் பிறந்தது எப்படி என்கிற கேள்விகள் எழுந்ததோடு, இது தொடர்பான தமிழக அரசின் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், நடிகை நயன்தாராவும் இயக்குநர் வினேஷ் சிவனும் தங்களது இந்த ஆண்டு தலை தீபாவளியை இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். அந்தக் கொண்டாட்டத்தை தங்களது சமூக வலைத் தளப்பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு, ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். அவர்களது தீபாவளி வாழ்த்து வீடியோ வைரலாகி வருகிறது.
நயன் தாரா, 'ஐயா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, இன்று தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி பிரபலமாகத் திகழ்கிறார். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா. கடந்த. ஜூன் 9-ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டதோடு, மகிழ்வோடு தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தேன்நிலவு சுற்றுப் பயணம் சென்று வந்தனர்.
அதன்பிறகு, நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில்தான், கடந்த 9ம் தேதி விக்னேஷ் சிவன் "நானும் நயனும் அம்மா அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது" என பதிவிட்டிருந்தார். திருமணமாகி 4 மாதத்தில் எப்படி என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தமிழக அரசு சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து விசாரித்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களை விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் சமர்ப்பித்தனர்.
தற்போது, வாடகைத்தாய் விவகாரம் ஓய்ந்த நிலையில், தங்கள் குழந்தைகளுடன் இந்தத் தலை தீபாவளியைக் கொண்டாடியுள்ளனர் நயன் - விக்கி தம்பதி. அதனை வீடியோவாகவும் வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக் கூறியுள்ளனர். வேட்டி சட்டையில் விக்கியும், பிங்க் நிற சேலையில் நயனும் ஆளுக்கொரு குழந்தையைத் தங்கள் கைகளில் தாங்கிப் பிடித்துள்ளனர். பின்னர் இருவரும் கோரஸாக ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறுகின்றனர். விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பகிர்ந்து, ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், வாடகைத் தாய் விவகாரத்தில், திருமணத்திற்கு முன்பே இருவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துவிட்டதாகவும், தகுந்த முன்னெச்சரிக்கை விதிகளைக் கடைப்பிடித்துதான் குழந்தை பெற்றுள்ளனர் என்பதும் அண்மையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, சர்ச்சைக்குரிய வாடகைத்தாய் விவகாரம் தற்போது தெளிவான முடிவுக்கு வந்துள்ளது.