நுரையீரல் பாதிப்பால் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்
நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.;
தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த்தின் 'அன்புள்ள ரஜினிகாந்த்' இவருக்கு பெயரையும் புகழையும் அள்ளித் தந்த படமாகும். நாயகியான பின்பு அதே ரஜினிகாந்த்துடன் 'எஜமான்' படத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே' படத்தில்தான் நடிகை மீனா கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு, தமிழின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நாயகியாக நடித்து முன்னணி நாயகியர் வரிசையில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்தநிலையிலேயே, கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர்கள் விஜய், தனுஷ், அரவிந்த்சாமி உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்தார்.
இந்தநிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்தார். பின்பு, அவர் அதிலிருந்து குணமடைந்தார். அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனா குணமடைந்த பின்னும் நுரையீரல் தொற்று தீவிரமடைந்ததால், சில தினங்களுக்கு முன்பு திடீரென நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல்போய் உள்ளது. இதன் விளைவாக அவரது ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று(28/06/2022) வித்யாசாகர் உயிரிழந்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணமடைந்த துயரச் செய்தியை அறிந்த திரையுலகினர், வித்யாசகரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, நடிகை மீனாவுக்கும் அவரது மகள் நைனிகாவுக்கும் ஆறுதல் கூறிவருகின்றனர். ஆனாலும், ஆற்றுப்படுத்த முடியாத துயரில் இருந்து மீள இயலாமல் மீனா படும் துயரை காண்போர் கண்கலங்கி உறைந்துபோய் நிற்கின்றனர்.