தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு விபத்து
தங்கலான் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான். பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர்கள் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. தங்கலான் திரைப்படம், கோலார் தங்க வயல் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி விவரிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு 50% சதவிகிதம் நிறைவடைந்த நிலையில், இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு ஒத்திகையின்போது நடிகர் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நடிகர் விக்ரமின் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி. தங்கலான் படத்தின் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தங்கலான் படப்பிடிப்பில் சிறிது காலம் பங்கேற்க முடியாது. அவர் விரைவில் நலம் பெற்று வருவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.