'பொன்னியின் செல்வன்' குறித்து ரசிகர்களிடம் கருத்துக் கேட்ட நடிகர் விக்ரம்..!
'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க திரையரங்குக்கு வந்த நடிகர் விக்ரம், ரசிகர்களிடம் படம் குறித்த விமர்சனம் கேட்டறிந்தார்.
உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்த இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' இன்று வெள்ளித் திரையில் வெளியாகி ரசிகர்களின் விழிகளுக்கும் செவிகளுக்கும் விருந்தாகியது. முதல் நாளான இன்று அதிகாலையில் இருந்தே திரையரங்கங்களில் படம் சிறப்புக் காட்சிகளாக வெளியாகியது.
படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே திரையரங்குகளில் நேரில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தனர். அவ்வகையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் படம் பார்க்க வந்திருந்தார்.
நடிகர் விக்ரம் படம் பார்க்க திரையரங்குக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் ஆர்வமிகுதியால் விக்ரமை சூழ்ந்து அவரோடு செல்பி எடுத்துக்கொண்டும் வாழ்த்துகளும் தெரிவித்தனர். அவர்களிடம் நடிகர் விக்ரம், ''படம் பார்த்துவிட்டீர்களா… படம் எப்படி இருக்கு. படத்தைக் குறித்து உங்கள் கருத்துகள் என்ன..?'' என்று கேட்டார். அதற்கு ரசிகர்கள், படம் நன்றாக இருப்பதாகவும், நீங்களும் உங்களுடன் நடித்த அனைத்து நடிகர்கள், நடிகைகள் அனைவருமே அவரவரது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.