விஜய் யாருடன் கூட்டணி போக வாய்ப்பு?
விஜய் யாருக்கு ஆதரவு கொடுக்கப்போகிறார்? யாருடன் கூட்டணி சேர போகிறார் என்பதே இன்றைய தேதியில் அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.;
விஜய் யாருக்கு ஆதரவு கொடுக்கப்போகிறார்? யாருடன் கூட்டணி சேர போகிறார் என்பதே இன்றைய தேதியில் அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.
நடிகர் விஜய் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும், அதிரடியாக தமிழகம் முழுக்க பெருமளவு ரசிகர்கள் படையைக் கூட்டி மிகப் பெரிய மாநாடு ஒன்றை நடத்திக் காட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என அவருடைய ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப விஜய்யும் அது தொடர்பான நடவடிக்கைகளை செய்து வருகிறார். இதனால் அவரது மக்கள் இயக்கத்தினருக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும், அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சம் பயமும் உண்டாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 10, 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினர். அது போல் விஜய் மாணவர்களிடையே பேசும்போது , அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்றார். மேலும் காசுக்காக ஓட்டு போடாதீர்கள் என்றும் காசுக்காக ஓட்டு போடக் கூடாது என உங்கள் பெற்றோருக்கு நீங்கள் அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் அந்த விழாவில் கேட்டுக் கொண்டார். இதனால் நேர்மையான அரசியல் செய்ய முன்வந்துள்ளார் விஜய் என பொதுமக்கள் அவரைக் கொண்டாடத் துவங்கினர்.
உலக பட்டினி நாள் அன்று 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவ்வப்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாககளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு கூட்டத்தின்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலையில் கட்சிகள் இருப்பதால் அவை தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் அதே கூட்டணியில் இருக்க முடிவு செய்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சியினருடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த பக்கம் இருக்கும் சின்ன சின்ன கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து போட்டு திமுகவை தோற்கடிக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
அதிமுகவும் திமுகவும் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான குழுக்களை அமைத்துள்ளன. மேலும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் நடிகர் விஜய் இன்று பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
காலை 8 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 10.30 மணி அளவில் கூட்டத்தை முடித்துக் கொண்டு அவர் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார். பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். கட்சியின் அடிமட்ட அளவை மேலும் வலுப்படுத்த வேண்டும். அரசியல் கட்சியாக பதிவு செய்த பின்னர் தனித்து போட்டியா இல்லை பிற கட்சிகளுக்கு ஆதரவா என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம் என விஜய் கூறியிருந்தார் என அவர்கள் தெரிவித்தனர்.
இருந்தாலும் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டோடு அந்த கூட்டணிக்காக களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சி தொடங்குவதன் மூலம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் செல்வாக்கு எவ்வளவு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.